
தமிழில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நெப்போலியன் நடிப்பதை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். திமுக சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் இருந்தார். பின்னர் பாஜகவில் இனைந்து செயல் பட்டு வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் தனுஷ், சிறுவயதிலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர், தனது குடும்பத்துடன் அங்கேயே குடியேறிவிட்டார். பின்பு அவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடத்தி வைத்தார். இவரது திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த நிலையில் தி.மு.க- எம்.பி. கனிமொழி ஜப்பானுக்கு சென்று நெப்போலியன் மகன் தனுஷிற்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார். இதனை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, தலைவர் கலைஞரின் மகள் கனிமொழி, ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கனிமொழியும் நானும், கலந்து கொண்டோம்.
இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, கனிமொழி ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து தனுஷையும் அக்ஷயாவையும் வாழ்த்தினார்கள். சிலமணிநேரம் தலைவர் கலைஞரைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம். மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.