சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல ஹிட் படங்களையும், ஜெயம் ரவி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் பிரதர் திரைப்படத்தையும் இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர் தன்னுடைய படங்களுக்கு கதை எழுதுவது பற்றிய சுவாரசியமான தகவலை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
எம்.ராஜேஷ் பேசுகையில், “எழுத்தாளராக ஒரு ஒன் லைன் ஸ்டோரியை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு படம் எழுதி இயக்கலாம் என்று தோன்றும். அதன் பிறகு என்னுடைய உதவி இயக்குநருடன் அந்த ஒன் லைன் ஸ்டோரியை பற்றி கலந்துரையாடுவேன். அதில் நிறைய கேள்விகள் எழும். அந்த கேள்விகள் கேட்கக் கேட்க அந்த ஒன் லைனுக்கான கதை பெரிய கதையாக மாறும். இந்த நிகழ்வுகள் நடக்க பெரிய கால இடைவெளி தேவைப்படும். முதல் நாளில் அந்த ஒன் லைனை மட்டும் வைத்துக்கொண்டு கதை எழுதத் தொடங்கிய நாளிலிருந்து போஸ்ட் புரொடக்ஷன் வரை முழு கதைக்கான திருத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். சில நேரம் படத்திற்கு இசையமைக்கும் காலம் வரை கதைத் திருத்தம் இருக்கும். ஏனென்றால் இசை படத்தின் சீனை மாற்றி விடும். அதனால் கதை முழுமையடைவதற்கான ட்ராவல் இருந்து கொண்டேதான் இருக்கும். என்னுடைய எல்லா கதையும் அப்படித்தான் அமைந்தது.
உதாரணத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் காதலன் ஒருவன் தன் நண்பனுடன் சேர்ந்து அவனுடைய காதலியின் திருமணத்தில் பங்கேற்கிறான். இது தான் அந்த படத்தின் ஒன் லைன். இதில் எப்படி மீண்டும் அந்த காதலர்கள் சேரப்போகிறார்கள் என்று பல்வேறு கேள்விகள் எழும். அப்படித்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் கதை முழுமை பெற்று அந்த கதைக்கான திரைக்கதையும் முழுமையானது. ஓகே ஓகே படத்தில் போலீஸிடம் உதயநிதி ஸ்டாலின் மாட்டிக்கொண்டு சந்தானத்திற்கு கால் செய்யும் சீன்கள் என்னுடைய வாழ்க்கையில் கூட பலமுறை நடந்துள்ளது. பெரும்பாலும் என்னுடைய வாழ்க்கையில் வரும் ரியலான கேரக்டர்களை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் கதையை எழுதுகிறேன்” என்றார்.