சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படம் நாளை(14.11.2024) வெளியாகவுள்ள நிலையில் படத்தை தடை விதிக்க வேண்டும் என மூன்று வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கு அண்மையில் முடிந்துவிட்டது. மற்ற இரண்டு வழக்குகள் நடைபெற்று வந்தது.
பியூயல் டெக்னாலஜிஸ்(Fuel Technologies)என்ற நிறுவனம் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட மூன்று படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து ரூ.6 கோடியே 60 லட்சத்துக்கு வாங்கியிருந்தது. இதில் இரண்டு படங்கள் தயாரிக்காததால் 5 கோடி ரூபாயை பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. இதையடுத்து மீதமுள்ள 1 கோடியே 60 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும், அதுவரை கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று(12.11.2024) விசாரணைக்கு வந்த போது பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள தொகையை சென்னை உயர்நீதி மன்றம் தலைமை பதிவாளரிடம் டெப்பாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் டெப்பாசிட் செய்ய தவறும் பட்சத்தில் படத்தை படத்தை வெளியிடக் கூடாது என தீர்ப்பளித்தது.
இதே போல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி மற்றொரு வழக்கும் இருக்கிறது. சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல முக்கிய நபர்கள் பணம் கொடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அந்த பணத்தைப் பலருக்கும் கடனாகக் கொடுத்திருக்கிறார். இதில் நிதி இழப்பு ஏற்பட, அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்பு அவர் மரணமடைந்த நிலையில் அவரது சொத்துக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டுப்பாட்டில் உள்ள, சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் கடன் வாங்கியவர்களிடமிருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
அந்த வகையில் அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ஆம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திரும்பிக் கேட்டு சொத்தாட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஞானவேல்ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி சொத்தாட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த இரு வழக்கு தொடர்பாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இன்று நீதிமன்றத்தில் பணத்தை செலுத்தியது. பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மீதமுள்ள 1 கோடியே 60 லட்சம் ரூபாயை செலுத்தியது. அதே போல் சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கில் ரூ. 6.41கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியது. மேலும் ரூ.3.75 கோடியை டிசம்பர் 11ஆம் தேதிக்குள் செலுத்துவதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து குறிப்பிட்ட தேதிக்குள் ரூ.3.75 கோடியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கங்குவா படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த வழக்கு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.