Chief Minister inquires about doctor Balaji  health

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

Advertisment

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த பேச்சுவார்த்தையின் போது மருத்துவ சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூடுதலாகச் சொன்னது, நோயாளிகளுடன் வரும் உதவியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் அல்லது வரன் முறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுடன் உடனிருப்பவர்களுக்கு (Attenders) அடையாள அட்டை வழங்கும் முறையினை நான் ஏற்கெனவே தொடங்கி வைத்திருந்தேன்.

Advertisment

அதேபோல் அனைத்து மருத்துவக்கல்லூரி நோயாளிகளுடன் உடனிருப்பவர்களுக்கு மருத்துவமனைகளிலும் அடையாள அட்டை வழங்கப்படும் முறை தொடங்கப்படவிருக்கிறது. மருத்துவர் சங்கங்களின் நிர்வாகிகள் கேட்டது மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துத் தான். அவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனையடுத்து, மருத்துவர் பாலாஜியிடம் தொலைப்பேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.