இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, இலங்கையின் 9வது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார். இதனையடுத்து, இலங்கையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (14-11-24) காலை 7 மணிக்கு இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில், அதிபர் அநுரா திஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி, 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இந்த தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே சகோதரர்கள் ஆகியோர்கள் போட்டியிடவில்லை.
225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் இந்த தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கை நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 225 பேரில், 196 உறுப்பினர்களை தேர்வு செய்ய இலங்கை மக்கள் வாக்களித்து வருகின்றனர். கட்சிகள் பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் மீதமுள்ள 29 பேர், நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப வாக்கு அடிப்படையில், வாக்காளர்கள் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 9,000 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில், 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.