இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தான் தயாரிக்கவுள்ள முதல் படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடிப் பேசவும்', 'மாரி', 'மாரி 2' ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். சில தினங்களுக்கு முன்பு தான் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
'ஓபன் விண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ள தன் நிறுவனத்தின் மூலம் படங்கள், வெப் சிரீஸ், குறும்படங்கள் போன்றவற்றை தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார் பாலாஜி மோகன்.
இந்நிலையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு மண்டேலா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று (ஜுலை 24) முதல் தொடங்கப்பட்டுள்ளது.