இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு கரண் ஜோகர் தயரித்துள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’.
இதில் குஞ்சன் சக்ஸேனாவாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். நெட்பிளிக்ஸில் நேரடியாக நேற்று வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு அவப்பெயர் தரும் வகையில் படத்தில் சில காட்சிகள் வசனங்கள் இருப்பதாக தணிக்கை வாரியம் தயாரிப்பு நிறுவனத்திடமும், நெட்பிளிக்ஸிடமும் தெரிவித்துள்ளது
அதில், “இந்திய விமானப்படை குறித்த நம்பகத்தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்தவும், அடுத்த தலைமுறை அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கவும் படம் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக தர்மா புரொடக்ஷன்ஸ் ஒப்புக்கொண்டது.
ஆனால் முன்னாள் விமானப்படை அதிகாரி குஞ்சன் சக்ஸேனாவை பெருமைப்படுத்தும் நோக்கில் தர்மா புரொடக்ஷன்ஸ் சில காட்சிகளில் இந்திய விமானப்படை பணி சூழல் குறித்து, குறிப்பாக விமானப்படையில் உள்ள பெண்கள் குறித்தும் தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்திய விமானப் படை எப்போதும் பாலின பேதமின்றி, ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு சம உரிமை வழங்கி வருகிறது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் தயாரிப்பு நிறுவனம் அது போன்ற எந்த காட்சிகளையும் நீக்காமல் திரைப்படத்துக்கு முன்னால் மறுப்பு ஒன்றை சேர்த்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.