இந்தாண்டிற்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதியிலிருந்து 19 தேதி வரை நடந்தது. இவ்விழாவின் நிறைவு விழாவில் பாக்கியராஜ், நாசர் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர். விழாவின்போது திரைக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறந்த படத்திற்கான விருது அமரன் மற்றும் ஜமா படத்திற்கு கொடுக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை அமரன் படத்திற்காக சாய் பல்லவி பெற்றுக்கொண்டார். அதே போல் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது லப்பர் பந்து படத்திற்காக அட்ட கத்தி தினேஷுக்கும் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வேட்டையன் படத்திற்காக துஷார விஜயனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வாழை படத்திற்கான பொன்வேலுக்கு கொடுக்கப்பட்டது.
பேவரேட் நடிகருக்கான விருது மெய்யழகன் படத்திற்காக அரவிந்த் சாமிக்கும் பேவரேட் நடிகைக்கான விருது கொட்டுக்காளி படத்திற்காக அன்னா பென்னுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த எழுத்தாளருக்கான விருதை மகாராஜா படத்திற்காக நித்திலன் சுவாமிநாதனுக்கு கொடுத்தனர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின்போது பாக்கியராஜ் பேசுகையில், “இன்றைக்கு சினிமாவின் தரம் சிறப்பான முறையில் இருப்பதை நான் உணர்கிறேன். காரணம் என்னவென்றால் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு படங்களை அடையாளப்படுத்த எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் என்று நடிகர்கள் பெயர்களைச் சொல்வார்கள். அதன் பிறகு கொஞ்ச நாட்கள் ஸ்ரீதர் படம், ஏ.பி.என். படம் என சில இயக்குநர்கள் பெயரைச் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் நடிகர்களுக்கு இணையாக முன்பு பேசப்பட்டனர். அதன் பின்பு நடுவில் சின்ன தொய்வு ஏற்பட்டு ரஜினி மற்றும் கமல் என்று பேச ஆரம்பித்தனர். ஆனால் இன்றைக்கு வெற்றி மாறன், பாலா, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், மிஷ்கின் என மீண்டும் இயக்குநர்கள் படங்கள் பேசத் தொடங்கிவிட்டனர் என்பது ஆரோக்கியமான சமாச்சாரம்.
சினிமாக்காரர்களுக்கு மீடியா உறுதியான ஒத்துழைப்பு கொடுக்கிறது. அதனால்தான் மீடியாவை நன்றி உணர்வுடன் பார்த்து வருகிறோம். ஆனால் சில நேரங்களில் மீடியாவினுள் தவறான எண்ணம் கொண்டவர்கள் நுழைந்து, தவறான விமர்சனங்களைப் பரப்புகின்றனர். இது கொஞ்ச நாட்களாக சினிமாத்துறையில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஓப்பனாக சொல்ல வேண்டுமென்றால் கங்குவா படம் வெளியானபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த படம் வெளியாகி மூன்று நாட்களாக தவறாக விமர்சனங்கள் பரவியது. அதன் பிறகு அந்த படத்தை நான் பார்த்தேன். உண்மையிலேயே அந்த படத்தில் கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்கள். யாருமே தவறான விஷயத்திற்கு கஷ்டப்படமாட்டார்கள். மக்கள் படத்தை பார்த்து விமர்சனம் சொல்வதெல்லாம் சரி. ஆனால், படத்தை பற்றி முதல் நாளிலிருந்து தவறாகப் பேசி யாரும் படத்திற்கு வரக்கூடாது என்று விமர்சனம் செய்திருப்பதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. தவறான ஆட்கள் மீடியாவை வைத்து கடினமான உழைப்பை கொலை செய்ய பயன்படுத்துகின்றார்கள்” என்றார்.