
தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.
கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பின்பு டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இருந்து சித்தார்த் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியாகியிருந்தது. அவர் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக நடித்துள்ளார். இந்த வீடியோவை தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிச்சந்திரன், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டெஸ்ட் படத்தில் சித்தார்த்தை பார்க்கும் போது பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடும் வீரரைப் பார்ப்பது போல் இருக்கிறது. அவரது தொழில்நுட்ப புரிதலும், விளையாட்டு மீதான அன்பும் அவரது உழைப்பின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இவை அனைத்தும் ஸ்கிரீனில் பார்க்கும் போது அவருக்கு இந்த படம் ஸ்பெஷலாக அமையும் என எனக்கு தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.