cc

(71) சினிமாவில் சில விபத்துக்களும் விபரீதங்களும்...!

"சர்வர் சுந்தரம்' என்றொரு நாடகம். நாகேஷ் நடிக்க, கே.பாலசந்தர் எழுதி இயக்க, சபாக்களில் வெற்றிகரமாக நடப்பதை, கல்லூரியில் படித்த நாட்களில் கேள்வியுற்று... அதனை ஒரு அமெச்சூர் நாடகக்காரனாக ஆவலுடன் போய் பார்த்தேன். என்னை மறந்து பல இடங்களில் சத்தமாக வாய்விட்டுச் சிரித்தேன். கைதட்டி மகிழ்ந்தேன். நாகேஷின் Timings, smart dialogue delivery, body language எல்லாமே சூப்பர். பாலசந்தரின் வசனங்களும் இயக்கமும், கதையின் புதுமையும் என்னை திகைக்க வைத்தன.

நாம இந்த கலையுலகில் வெற்றிபெற முடியுமா? என்ற பயமும் லேசாக என்னுள் தலையெடுக்க ஆரம்பித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். என்ற கற்பகவிருட்சத்தின் கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடும் வாய்ப்பு வந்ததும்... ஏனைய எதுவுமே எனக்கு கடினமாகப் படவில்லை.

Advertisment

"சர்வர் சுந்தரம்' படமானது. அது வெற்றிகரமாக ஓடியது. ஆனால் அதில் சில காட்சிகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அது திரையுலகுக்கு, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விபத்தா? விபரீதமா?

மனம் உடைந்த நிலையில் எம்.ஜி.ஆரை சந்திக்கப் போனேன். அப்போது அவர் சில தயாரிப்பாளர்களுடன் இது பற்றித்தான் கவலையோடு பேசிக்கொண்டிருந்தார். சர்வர் வேலை செய்யும் ஓட்டல் முதலாளியின் மகள் இந்த சர்வர் செய்யும் சேட்டைகள், பரிமாறும்போது பேசும் வசனங்கள், கலகலப்பாக செய்யும் சிறு சிறு குறும்புகள் இவற்றைப் பார்த்து தன்னை மறந்து சிரிக்கிறாள். மறுபடி சந்திக்கும்போதும் அவனைப் பாராட்டுகிறாள். இறுதியில் போகும்போது 'I like your innocence' என காந்தச் சிரிப்போடு சொல்லிவிட்டுப் போகிறாள். அதை அவன் தவறாக எடுத்துக் கொண்டான். ''innocence'' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத சர்வர், காதல் என நினைக்கிறான். இவரது நண்பன் முத்துராமன், சர்வரின் inferiority complex-ஐ போக்கப் போராடுபவன். இந்த நண்பனைத்தான் முதலாளி மகள் காதலிக்கிறாள். அவன் காதலியிடம் தன் நண்பனின் தாழ்வுமனப்பான்மை நீங்கும்வரை அவனை காதலிப்பதுபோல் நடிக்கச் சொல்ல, அவளும் சம்மதிக்கிறாள். அதை நம்பி சர்வர் நடிகனாகி, வளர முயற்சிக்கிறான். அப்போது அவசியமில்லாத காட்சிகள் "ஷூட்டிங்' என்ற பெயரில் காட்டப்படுகின்றன. அவை அந்தக் காலத்தில் மக்களுக்குத் தெரியாதவை. Back Projection. அதில் மரக்குதிரையில் நின்ற இடத்தி லேயே வேகமாக ஓட்டுவது போல் எப்படி நடிக்கிறார் நாயகன்... மழை பெய்வது, புயல் அடிப்பது எல்லாமே செட்டுக் குள் போலியானது என்ப தெல்லாம் காட்டப்படுகிறது. இவற்றை மக்களுக்கு அந்தக் காலத்தில் காட்டவேண்டிய அவசியம் என்ன? 'Innocence' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத நாயகன், நடிகன் ஆன பின்னாலும் அதுக்கு அர்த் தத்தை தெரிந்துகொள்ளாத, கொள்ளவிரும்பாத நாயகனை வைத்து நகைச்சுவையாக படத்தை நகர்த்தும் போது சினிமா ரகசியங்களை அம்பலப்படுத்துவது அவசியமா? இது சினிமாவுக்கு விபத்தா? விபரீதமா? எம்.ஜி.ஆர். கவலைப்பட்டது சரியென்றே எனக்குப்பட்டது. கோவில் கருவறைக்குள் சொல்லப்படும் மந்திரங்கள், இன்னமும் வேற்று மொழியில் சொல்லப்படுகின்றன. அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் மறைக்கப்படுகின்றன. ஆனால் சினிமாவின் ரகசியங்களை வெளியே காட்டி விடுவதில் என்ன நன்மை?

சினிமா நிஜமல்ல, நிழல்தான்... மக்கள் அறிவார்கள். தூக்கு மாட்டி ஒரு கதாபாத்திரம் இறப்பது காட்சியென்றால்... அது உண்மையல்ல! ஆனால் விட்டலாச்சாரியாரின் பழைய படங்கள் "மாய மோதிரம்', "ஜகன்மோகினி' போன்ற படங்கள் கிராஃபிக்ஸ் இல்லாத காலத்தில் எப்படி எடுக்கப்பட்டன என்பது எனக்கே வியப்பைத் தந்தது. அந்த ரகசியமெல்லாம் மறைக்கப்பட்டன. நான் திரையுலகில் நுழைந்த காலகட்டத்தில் ஷூட்டிங் பார்ப்பதே கஷ்டம். மிகத் தெரிந்தவர்கள் மட்டுமே போய் பார்க்கமுடியும். ஆனால் இந்தக் காலத்தில் தெருவுக்குத் தெரு ஷூட்டிங். படம் மட்டுமா வெப் சீரிஸ், சீரியல்கள், யுடியூபர்ஸ், விளம்பர பிட்ஸ் இப்படி ஏராளம்.

Advertisment

அண்மையில் விருதுகளுக்கான படங்கள் பார்க்கும் குழுவில் இருந்தேன். வந்த படங்கள் பலவற்றைப் பார்க்கும்போது... கதறி அழவேண்டும் போல் தோன்றியது. அவ்வளவு கேவலம், அவ்வளவு விரயம். நடிக்கும் முகங்கள் கோரம், கதைகள்... அகோரம். வறுமை நீங்கலாக நமது கிராமங்களை நினைத்தால்... இதைப்போன்ற பயனற்ற, நோக்கமற்ற படங்கள் எடுப்பவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. குற்றம் 'National waste'.

vv

தற்போது எடுக்கப்படும் வெப்சீரிஸ் எல்லா மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓ.டி.டி. தளத்தில் வருகின்றன. பல சீரியல்களில் வரும் வசனங்கள் அத்தனை அசிங்கம். கெட்ட, கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் பேசப்படுகின்றன. இது விபத்தா? விபரீதமா? உடலுறவுக் காட்சிகள் மிகக்கேவலமாகக் காட்டப்படுகின்றன. இது விபத்தா? விபரீதமா? மொழி காக்க உயிர்த்தியாகம் பண்ணுகின்ற நமது தமிழினம், கலை, கலாச்சாரத்தை காற்றில் பறக்க விட்டுவிடுவது மன்னிக்கப்படக்கூடியதா?

ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கிறதென் றால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெருகுகிறது என புரிந்துகொள்ளலாம். இறக்குமதி அதிகரிக் கிறதென்றால் அந்த நாட்டின் உற்பத்தி, இறங்குமுக மாகிறது எனத் தெரிந்துவிடும். தமிழ்த்திரையுலகில் 1975களுக்குப் பின்னால் என்ன நடந்தது? எண்ணிப் பாருங்கள். இறக்குமதி அதிகமானது. நடிகர்கள், நடிகைகள் என ஆரம்பித்து தொழில்நுட்பக் கலைஞர்கள், கதைகள் என எல்லாமே வெளி மாநிலங்களிலிருந்து வந்தவை அதிகம். 1945-க்குப் பின்னால் தமிழ் கலையுலகம் மறுமலர்ச்சி காணத் தொடங்கியது. கதைகளாகட்டும், பாடல் களாகட்டும், நடிகர்களாகட்டும், நடிகைகளாகட் டும், இயக்குநர்களாகட்டும், தயாரிப்பாளர் களாகட்டும்... எல்லாமே ஏறுமுகமாக இருந்தன. எமது படங்கள், கதைகள் அனைத்தும் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. கிருஷ்ணன்- பஞ்சு, எல்.வி.பிரசாத், ஏ.பீம்சிங், ஸ்ரீதர் ஆகியோர் இந்திப் படவுலகில் கொடிகட்டிப் பறந்தனர். பாலுமகேந்திரா, பாலசந்தர் ஆகியோரும் பிறமொழிகளில் சாதனை புரிந்தவர்களே.

நானும் பல மொழிகளில் கதை எழுதி வெற்றியடைந்திருக்கிறேன். தெலுங்கில் மட்டும் 69 படங்கள் பண்ணியுள்ளேன். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எழுபத்தைந்து வருடங் களுக்கு முன்பாக ஒரே நேரத்தில் பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட "சந்திரலேகா' என்ற படத்தை ரிலீஸ் செய்து பெருவெற்றியடைந்தவர் நமது இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ ஓனர் எஸ்.எஸ்.வாசன்.

அதேபோல் வடநாட்டுக்குப் போய்வந்த பேரறிஞர் அண்ணா சொன்ன செய்தி... "மாலை ஒரு படம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வடநாட்டில் ஒரு தியேட்டருக்குள் போய் அமர்ந்தேன். இந்திப் படம்தான். படம் ஆரம்பித்ததும் மக்கள் கைதட்டி, விசிலடித்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எதற்காகத் தெரியுமா? திரையில் ஏவி.எம். பேனரும், அதற்காக இசையும் வந்ததுதான். எனக்கு அது பெருமையாக இருந்தது'' என்று சொன்னார்.

இன்று நிலைமை என்ன?

நாம் "பாகுபலி'யை, "மஞ்சுமல் பாய்ஸ்'ஐ, "கே.ஜி.எஃப்.', "புஷ்பா', "தங்கல்' போன்ற பல படங்களைப் பார்த்து பாராட்டிக் கொண்டிருக்கிறோம். பான் இந்தியா, கார்ப்பரேட் கம்பெனிகள், விஞ்ஞான வளர்ச்சி... இப்படி பல காரணங்களைச் சொல்வார்கள் தோற்றுப் போனவர்கள்.

ss

நான் சொல்வது அதுவல்ல...! கண்ணாம்பா வின் தாய்மொழி தெலுங்குதான். ஆனால் அவர் "மனோகரா'வில் பேசிய வசனங்கள் எப்படிப் பேசப்பட்டது? "கண்ணகி'யில் அபாரம். கலைக்கு மொழி கிடையாது. ஆனால் அதற்காக நம் கலையை, கலாச்சாரத்தை, அதன் தரத்தை இறங்குமுகம் காணவிடுவதும், பிறமொழிக் கலைஞரிடம் அடமானம் வைத்துவிடுவதும் விபத்தா? விபரீதமா?

தமிழ் படங்களின் இன்றைய வியாபார நிலை என்ன? அரசியல் கட்சிகள் திரையுலக வியாபாரத்தையும், தங்கள் கைக்குள் அடக்கி விட்டனர். அவர்களின் கனிவான பார்வை இருந்தால் மட்டுமே படங்கள் தியேட்டர்களில் காட்டப்படும். இது விபத்தா? விபரீதமா? முன்பெல்லாம் படத்தை எடுப்பவர் தயாரிப்பாளர். அதை விநியோகம் செய்பவர் விநியோகஸ்தர். அவர் தியேட்டர் உரிமையாளரிடம் பேசி தியேட்டர்களுக்கு படம் கொடுப்பார். மக்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பார்கள். தற்போது அப்படியா? முதலில் கார்ப்பரேட் கம்பெனியிடம் நான் படம் எடுக்க விரும்புகிறேன்... என் படத்தை நீங்கள்தான் தியேட்டர்கள் மூலம் மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும், செய்வீர்களா? என அனுமதி பெற்று, அவர் ஓ.கே. என்று சொன்னால் மட்டுமே படத்தை தயாரிக்க முடியும்.

1952ல் இந்த நிலை இருந்திருந்தால் பி.ஏ.பெருமாள் "பராசக்தி'யை எடுத்திருக்க முடியுமா? கருணாநிதி என்ற எழுத்தாளர் எழுதியிருக்க முடியுமா? சிவாஜிகணேசன் நடித்திருக்க முடியுமா? இது விபத்தா, விபரீதமா?

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்