திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று இந்து அமைப்புகளோடு சேர்ந்துகொண்டு பா.ஜ.க.வினர் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மீ.த.பாண்டியன் ஆகியோரின் முன்னெடுப்பில், மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பாக, "திருப்பரங்குன்றம் தமிழர்களின் பெருமிதம்! மத நல்லிணக்க அடையாளம்!' எனும் தலைப்பில் மத நல்லிணக்க மாநாட்டை நடத்த முடிவெடுத்தனர். மாநாட்டுக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததால், நீதிமன்றம் செல்ல... அங்கு அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறுவழியின்றி உள் அரங்கில் மாநாடு நடைபெற்றது. அதில், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நாகை திருவள்ளுவன், பசும்பொன் பாண்டியன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மீ.த.பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முபாரக், சித்தர் மூங்கிலடியார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், ஆன்மிக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ss

திருப்பரங்குன்றம் மக்கள் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நிலையில், மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன், அறநிலையத்துறை அதிகாரி சூரியகுமார், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் சண்முகம், தமிழ்நாடு அரசின் உளவுத்துறை தலைவர் செந்தில்வேலன் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள். சங்பரிவார் ஆதரவாளர்களான இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மாநாட்டில் பேசிய திருமாவளவன், "மதுரை மாநகர் காவல்துறை இந்த மாநாட்டிற்கும், பேரணிக்கும் அனு மதி வழங்கவில்லை. திருப்பரங் குன்றத்தில் மதவெறியைத் தூண்ட அனுமதித்தவர்கள், மத நல்லிணக்கத்திற்கு அனுமதி மறுத்தது அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சியாளர்கள் மத நல்லிணக் கத்தை விரும்பும் சூழலில், அதிகாரிகள் அனுமதிக்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மதுரை மாநகர்ss காவல்துறை, ஆட்சி நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பதை நாங்கள் கண்டிக் கிறோம். காவல்துறையும், வருவாய்த்துறையும் மத வெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அரசு எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோட்பாடுகளை, அரசு அதி காரிகள், சினிமா இயக்குனர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளைச் சந்தித்து, மூளைச்சலவை செய்து, அவர்களைத் தங்களுக்கானவர்களாக மாற்றுவார் கள். அதுதான் தற்போது தமிழ்நாட்டில் நடக் கிறதோ என எண்ணத் தோன்றுகிறது'' என்றார்.

Advertisment

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "மத வெறுப்புணர்வைத் தூண்டி மதங்களுக்கிடையே கலவர நெருப்பை பற்ற வைப்பவனும், மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டுவர நெருப்பை அணைப்பவனும் ஒன்றா? மாவட்ட ஆட்சியரிலிருந்து வருவாய் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் வரை பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை அனைத்து தோழமைக் கட்சிகளும் சுட்டிக் காட்டுகிறோம். அரசு முழித்துக்கொள்ள வேண்டும். சங்பரிவார் அதிகாரிகளை இனங்கண்டாக வேண்டிய தருணம் இது'' என்றார்.

அடுத்து பேசிய அரசு காஜியார் சபூர் முகைதீன், "இங்கு வாழும் இந்துக்கள் முஸ்லிம் களுக்கிடையே எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் அண்ணன், தம்பிகளாகத்தான் இருக் கிறோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து சதியை முறியடிப்போம்'' என்றார். தமிழின குருபீடத்தை சேர்ந்த பெண் துறவியான சத்தியபாமாவோ, "இந்துத்துவவாதிகள் திருப்பரங்குன்ற மலை, முருகன் மலையா, சிக்கந்தர் மலையா என்கிறார்கள். இது தமிழர்கள் மலை. முருகன் தமிழர்களின் கடவுள்'' என்றார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து கேட்டபோது, "எங்களின் அடுத்தகட் டப் போராட்டமாக அனைத்து ஆதீன மடங்கள், தமிழ் ஓதுவார் கூட்டமைப்புகளை ஒருங் கிணைத்து, திருப்பரங் குன்ற முருகனை ஆக்கிர மித்துள்ள பார்ப்பனர் களை வெளியேற்றி, தமிழிலேயே முருகனுக்கு வழிபாடு நடத்துவதற் கானதாக இருக்கும். அதற்கான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் முன்னெடுக்கவுள்ளோம்'' என்றார்.

Advertisment

மூங்கிலடியார் ஆதினத்திடம் நாம் கேட்டபோது, "தமிழகத்தில் வாழும் இந்து, முஸ்லிம், கிருஸ்தவர் அனைவருமே தமிழர்கள் தான். சனாதன இந்துத்துவா வேறு, தமிழ் இந்துக் கள் வேறு. நாம் நாட்டார் வழிவந்த குலதெய்வ வழிபாடு உள்ளவர்கள். முருகனே ஒரு சித்தர் தான். சங்ககால தமிழ்புலவர் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில், முருக வழிபாட்டில் ஆட்டுக்கிடாய் படையல் குறித்து கூறப்பட்டுள் ளது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுப்போம். திருப்பரங்குன்றம் மட்டு மின்றி, பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள் ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழி லேயே ஓதப்பட வேண்டும். தினை அரிசியும், ஆட்டுக்கிடாயும் பலிகொடுத்து வழிபட இந்து அறநிலையத்துறை துணைநிற்க வேண்டும்'' என்றார். இதை மற்ற ஆன்மிகவாதிகளும் ஏற்றுக் கொண்டு பேசியதால், திருப்பரங்குன்றத்தில், தமிழ்க்கடவுள் முருகனை சமஸ்கிருதத்திலிருந்து மீட்கும் போராட்டம் புதிதாகத் தொடங்கு மெனத் தெரிகிறது.