கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் மீது மீ டூ இயக்கத்தில் புகார் அளித்திருந்தார். அதில், நிபுணன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நிலையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது தென்னிந்திய திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கப்பன் பார்க் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன் பேரில் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை மறுத்த அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, கப்பன் பார்க் காவல் துறையினர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் மீது 3 ஆண்டுகள் விசாரணை நடத்தி 2021 ஆம் ஆண்டு நவம்பரில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இவ்வழக்கிலிருந்து அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். பின்பு நீதிமன்றத்தின் உத்தரவை ஸ்ருதி ஹரிஹரன் எதிர்த்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள 8வது கூடுதல் தலைமை நீதிமன்றம் நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.