பிரதமர் மோடி திரைப்படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. புதுடெல்லியில் நடைபெற்றதாக சொல்லப்படும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், "நாம் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம். சிலர் சில திரைப்படங்களைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை கூறுவதால், அது ஊடகங்களில் பேசு பொருளாக மாறுகிறது. அதனால் நம் கடின உழைப்பு மறைகிறது. எனவே இனிமேல் நமது உழைப்பை மறைக்கும் வகையில் தேவையற்ற கருத்துக்களை யாரும் கூற வேண்டாம்" என மோடி கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்பட்டது.
பிரதமர் மோடி பதான் படத்தை குறிப்பிடாத நிலையில், பா.ஜ.க தலைவர்கள் சமீபத்தில் பதான் படம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தது அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது. இதனால் பதான் படத்தைத் தான் மோடி குறிப்பிடுகிறார் என்றும் பரவலாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மோடியின் கருத்துக்கு பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். ‘பிரதமர் மோடி இந்த கருத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால், அது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்போது அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அது அவர்களின் சொந்த மக்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தது. இப்போது விஷயங்கள் கையை மீறிப் போய்விட்டன என்று நான் நினைக்கிறேன். யாரும் யாருடைய பேச்சையும் கேட்கமாட்டார்கள்" எனப் பேசியுள்ளார்.
இதனை தனது அடுத்த படமான 'அல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொஹபத்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசினார் அனுராக் காஷ்யப். முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான 'டோபாரா' பாலிவுட்டில் சமீபமாகப் பரவி வரும் பாய்காட் கலாச்சாரத்தால் எதிர்ப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.