சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமை வழக்கு இது. கேரளா மாநிலத்தில் இடுக்கி அருகே உள்ள சூரியநெல்லி என்ற கிராமத்தில் அந்த சிறுமி வசித்து வருகிறாள். அந்த சிறுமியின் அப்பா, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி அருகிலுள்ள டாடா எஸ்டேட்டில் வேலை செய்து வரும் தொழிலாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் இரண்டு குழந்தைகளை முதலில் கோட்டையம் என்ற பகுதியிலுள்ள மவுட் கார்மேல் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர். இளைய மகளுக்கு உடல்நிலை சரி இல்லாததால் மூத்த மகளை மட்டும் அங்கிருந்து படிக்க சொல்லிவிட்டு தங்களது இளைய மகளை மூணாரிலுள்ள லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.
இளைய மகள் தனது உடல்நிலை மோசமாவதால் அடிக்கடி மூணாரிலிருந்து பேருந்தில் சூரியநெல்லிக்கு வந்துவிடுவாள். இப்படி வந்து செல்லும் சமயத்தில் ஒரு பேருந்தில் தன்னைவிட 10 வயது அதிகமாக இருக்கும் நடத்துநர் ராஜு என்பவனுடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்படுகிறது. அந்த பையனும் தனது குடும்ப கஷ்டத்தை அந்த சிறுமியிடம் கூறி அவ்வப்போது பணம் வாங்கி இருக்கிறான். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படும் எடுத்திருக்கின்றனர். அந்த புகைப்படத்தை ஆடை இல்லாதவாறு எடிட் செய்து அந்த சிறுமியின் அப்பா வேலை செய்யும் அலுவலக சுவற்றில் ஒட்டிவிடுவேன் என்று சொல்லி சிறுமியிடம் மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கி இருக்கிறான் ராஜு. அந்த சிறுமியும் சில நேரம் தன்னிடம் இருந்த நகையை விற்று அவனுக்கு பணம் கொடுத்து வந்துள்ளது.
ஒருபக்கம் அவன் மீது இருந்த காதலாலும் இதை அந்த சிறுமி செய்திருக்கிறது. ஆனால் ராஜு பேராசையால் சிறுமிடம் இருந்து மொத்தமாக பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளான். இதற்காக ஒரு நாள் ராஜு அந்த சிறுமியிடம், உன் திருமணத்திற்காக வாங்கி வைத்த நகை, புடவை, பணம் எல்லாவற்றையும் இரண்டு பைகளில் எடுத்துக்கொண்டு மூணாரிலுள்ள ஹாஸ்டலுக்குச் சென்று அங்கு எதாவது காரணத்தை சொல்லி என்னிடம் வந்துவிடு அதன் பிறகு அடிமல்லி பகுதிக்கு வா, அங்கிருந்து கோதமங்கலம் சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறான். அவன் சொன்னதுபோல இந்த சிறுமி செய்துவிட்டு அவனை பார்க்க அடிமல்லிக்கு வந்துள்ளது. அங்கிருந்து இருவரும் மாலை 4.30 மணியளவில் பேருந்தில் ஏறியுள்ளனர். உள்ளே ஏறியதும் அந்த சிறுமியிடம் இருந்த பைகளை எடுத்துக்கொண்ட ராஜு பேருந்தின் பின்புற சீட்டில் அமர்ந்துகொண்டு அந்த சிறுமியை முன்பு இருக்கும் சீட்டில் அமரச் சொல்கிறான்.
பேருந்து கோதமங்கலம் ஸ்டாப் வந்தபோது அந்த சிறுமி பின்னாடி திரும்பி பார்க்கையில் ராஜுவும் அவள் கொண்டுவந்த பைகளும் பேருந்தில் இல்லை. பின்பு பேருந்திலிருந்து இறங்கி ஹாஸ்டல்போனால் தான் அங்கிருந்து சென்றுவிட்டதை வீட்டில் சொல்லி இருப்பார்கள், அப்பா திட்டுவார் என்று எங்கும் போக முடியாது என்று நினைத்து கோட்டையத்திலுள்ள சித்தி வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து மூவாற்றுப்புழா செல்லும் பேருந்தில் ஏறுகிறாள். அதே பேருந்தில் உஷா என்ற பெண் ஏறி அந்த சிறுமி இறங்கும் மூவாட்டுப்புழா ஸ்டாப்பில் இறங்கி தன்னை ராஜுவுக்கு தெரிந்த நபர்போல் அறிமுகமாகிறாள். பின்பு அந்த சிறுமியிடம் ஏன் இந்த இடத்தில் இருக்கிறாய் என்று கேட்டதற்கு அந்த பெண் கேட்டதற்கு கோட்டையம் செல்வதற்காக இங்கு வந்து திருவனந்தபுரம் பஸ் ஏற வந்தேன் என சொல்லி இருக்கிறாள். பின்பு இருவரும் சேர்ந்து பயணிக்கும்போது கோட்டையம் சித்தி வீட்டிற்கு போவதற்கு பதிலாக முண்டக்காயத்திலுள்ள மாமா வீட்டிற்கு செல்ல அந்த சிறுமி முடிவெடுக்கிறாள். பின்பு இருவரும் கோட்டையத்தில் இறங்கியுள்ளனர்.
உஷா அந்த சிறுமியிடம் இப்போது எங்கு செல்ல போகிறாய் என்று கேட்க அந்த சிறுமி முண்டக்காயதிற்கு போவதாக கூறியிருக்கிறது. அதற்கு உஷா, இரவு நேரம் ஆனதால் அங்கு செல்ல பேருந்து இருக்காது என்று சொல்லி தன்னுடைய நண்பர் ஒருவர் கோட்டையத்தில் இருக்கிறார். அவரின் வீட்டில் தங்கிவிட்டு காலையில் எழுந்து முண்டக்காயதிற்கு போ என்று தன்னுடைய நண்பரான தர்ம ராஜ் என்ற வழக்கறிஞர் தனது அம்மாவுடன் இருக்கிறார் என்று கூறி அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்று உஷா சென்றுவிடுகிறாள். அங்கு சென்று பார்த்தால் அந்த வழக்கறிஞர் மட்டும்தான் இருந்துள்ளார். இதன் பின்னணியில் ராஜு, உஷாவிடம் சிறுமியை விற்றதும் அவள் தர்ம ராஜுவிடம் சிறுமியை விற்று இருக்கிறாள். தர்ம ராஜ் அந்த சிறுமியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.
அதற்கு அடுத்த நாள் தர்ம ராஜ், அந்த சிறுமியை எர்ணாகுளத்திற்கு அழைத்துச்சென்று சில நபர்களிடம் பணம் வாங்கிவிட்டு சிறுமியை ஒப்படைக்கிறான். அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையடுத்து, அந்த சிறுமியை தனது சொந்த ஊரான வனமேல் என்ற பகுதிக்கு அழைத்து ஒரு வாரம் அங்கு தங்கி சில நபர்களை வரவழைத்து பெரிய தொகை வாங்கி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறான். ஒவ்வொரு முறையும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது மதுபானத்தை சிறுமியின் வாயில் ஊற்றி போதையில் வைத்தே வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி தொடர்ந்து 40 நாட்கள் குமுளி, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு அழைத்து சென்று பணம் வாங்கிவிட்டு அந்த சிறுமியை பலராலும் வன்கொடுமை செய்ய வைக்கிறான்.
சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாதபோது பெரியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கின்றனர். அப்படி இருந்தும் சிறுமிக்கு உடல் சோர்வு மற்றும் அந்தரங்க உறுப்பு சிதைந்து வேதனைப்பட்டுள்ளது. அதனால் தர்ம ராஜ், ஜமால் ஆகியோர் ஏலப்பாரா என்ற ஊரிலுள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து செல்கின்றனர். செல்லும் வழியில் யாரிடமும் தங்களைப் பற்றி சொல்லக்கூடாது என்று மிரட்டி அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்துள்ளனர். அதன் பிறகும் சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்துள்ளதை அறிந்த தர்ம ராஜ் சிறுமியை அழைத்து சென்று சிறுமியின் அப்பா அலுவலகம் முன்பு விட்டுவிட்டு செல்கின்றான்.
அதன் பிறகு தனது மகளை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அந்த சிறுமியின் அப்பா பார்த்திருக்கிறார். உடனே என்ன ஆனது என்று சிறுமியிடம் கேட்டறித்த அவர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். பின்பு மகளை அடிமல்லியிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் வி.கே.பாஸ்கர், சிறுமியை பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறப்புறுப்பு சிதைந்துள்ளது. ஆனால் சிறுமி தனக்கெதிரான வன்கொடுமையை தடுத்த மாதிரியான அறிகுறிகள் இல்லை. அதே நேரம் மனப்பூர்வமாக சிறுமி அதில் உடன்படவில்லை. அதனால்தான் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று முன்பின் முரணான ரிப்போர்ட்டை தருகிறார்.
மேலும் சிறுமியின் கருப்பை சேதம் அடைந்துள்ளதால் அதை உடனடியாக நீக்க வேண்டும். ஆனால் சிறுமி இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறி சிகிச்சையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுமி காணமல் போனபோது, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த காவல்துறையினர், சிறுமியுடன் ராஜு சுற்றியதாக வந்த தகவல் அடிப்படையில் அவனை விசாரித்துள்ளனர். அதற்கு அவன் தெரியாது என்று பதிலளிக்க ராஜுவை போகச்சொல்லி சீரியஸாக காவல்துறை விசாரிக்காமல் இருந்தது. ஆனால் இதை விசாரித்த அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சிறுமியை 38 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் செய்தவர்கள் அனைவரும் டாக்டர், போலீஸ், கட்சிக்காரர்கள் போன்ற பின்புலத்தை கொண்டவர்களதான் என்பதை தெரிவிக்கின்றனர்.
இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்...