ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடங்கி, 1,000வது நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், இந்த போரில் உக்ரனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
ஏற்கெனவே, ரஷ்யாவில் உள்ள ராணுவ இலக்குகளை தாக்க நீண்ட நேர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அனுமதி வழங்கியிருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷியா பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் நிப்ரோ நகரத்தை குறிவைத்து, ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில், பாதிப்பு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
5,000 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணைக்கு விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.