Skip to main content

“அதானி  ஊழல் : தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்” - ராமதாஸ்

Published on 21/11/2024 | Edited on 21/11/2024
 Ramadoss said should be inquiry into role TN Electricity Board adani issue

அதானி ஊழல் : தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அதானி சந்திப்பு பற்றி முதல்வர் விளக்க வேண்டும் எனபாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு  சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணத்தில்,  அதானி குழுமம் அமெரிக்காவில் 300 கோடி அமெரிக்க டாலர், அதாவது 25,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைத் திரட்டியதாகவும்,  இந்த முதலீடுகளை திரட்டுவதற்கு அடிப்படையாக பல்வேறு மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைக் காட்டியதாகவும், அந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பல அமைப்புகளின் அதிகாரிகளுக்கு  கையூட்டு கொடுத்து விட்டு அதை மறைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.  அந்த ஆவணத்தின்  20 மற்றும் 21-ஆம் பத்திகளில் தமிழ்நாடு மின்சார வாரியமும்,  அதன் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,’’ ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து    உற்பத்தியுடன் இணைந்த  திட்டத்தின்படி  சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு  ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய  நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு  கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.8 லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட  மின்சார வாரியம் இலாபத்தில் இயங்கவில்லை என்பதை பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மின்சார வாரியத்திற்கு காரணம்  அதானி குழுமம் போன்ற நிறுவனங்களிடமிருந்து கையூட்டு வாங்கிக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவது தான்.  ஆட்சியாளர்களின் லாபம்  மற்றும் சுயநலத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளுவதையும்,  அப்பாவி மக்கள் மீது மின்கட்டண சுமையை சுமத்துவதையும் அனுமதிக்க முடியாது.

கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள  அவரது  இல்லத்தில்  அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார்.  இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து  தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் -  அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்