மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்தை ஒட்டியுள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான ஆய்வுடன் கூடிய சுரங்க குத்தகை ஏல அறிவிப்பு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருக்கக்கூடிய ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை சுரங்க அமைச்சகம் தகுதியான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை பொறுத்தவரை பல்லுயிர் பாரம்பரிய தளமாக தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 2000 ஹெக்டரில் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலூர் தாலுகாவில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதி பல்லுயிர் பாரம்பரிய தளமாக இருக்கும் நிலையில் அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது வரை எந்த அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் நேற்று வெளியான நிலையில் தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசுக்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை. அனுமதி ஏதும் தற்போது வரை வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.