Skip to main content

இந்தியாவை மிரளச் செய்த ஊழல்; அதிர்ச்சி மரணங்கள் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 19

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-19

 

இந்தியாவையே உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து நம்முடன் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி பகிர்ந்து கொள்கிறார்.

 

2012 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் ஒரு இன்ஜின் டிரைவர், வரும் வழியில் ஒரு பெண் அடிபட்டுக் கிடப்பதைத் தான் பார்த்ததாகப் புகார் கொடுக்கிறார். 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இறந்து கிடந்தார். போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கிருந்த மருத்துவர் அந்தப் பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் குறித்து தன் கைப்படவே எழுதினார். மிகுந்த வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாத நிலையில் அந்தப் பெண் இறந்ததாக எழுதினார். அந்தப் பெண் குறித்த மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

 

மூன்று வாரங்கள் கழித்து அந்தப் பெண்ணின் தந்தை தன்னுடைய பெண்ணின் உடலை அடையாளம் காட்டினார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பெண் அவர். மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். தன் பெண்ணின் சாவுக்கு அவர் நீதி கேட்டார். ஆனால் இது தற்கொலை தான் என்று அவருக்கு பதில் தரப்பட்டது. காதலால் அவர் இறந்தது போல் கட்டுக்கதைகளை போலீசார் உருவாக்கினர். ரயிலில் அடிபட்டு அந்தப் பெண் இறந்ததாகக் கூறினர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து ஆஜ் டக் செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வியாபம் ஊழல் மூலம் பலர் மர்மமான முறையில் இறப்பது குறித்த விசாரணையில் இறங்கினார்.

 

அந்தப் பெண்ணின் தந்தையை கிராமத்திற்கு சென்று சந்தித்தார். வியாபம் வழக்கிற்கும் தன்னுடைய பெண்ணின் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தந்தை கூறினார். தன்னுடைய பெண்ணின் கொலை குறித்த டாக்குமெண்ட் ஒன்றை செய்தியாளரிடம் தந்தை கொடுத்தார். அப்போது அவருக்கு டீ கொடுத்தனர். அதைக் குடித்தவுடன் உடனடியாக அந்த இடத்திலேயே அவர் மரணமடைந்தார். அதன் பிறகு அனைத்து செய்தி ஊடகங்களும் இந்த விஷயம் குறித்து தீவிரமாகப் பேச ஆரம்பித்தன. அப்போதுதான் தெரிந்தது இது நீண்ட காலமாக நடந்து வரும் மிகப்பெரிய ஊழல் என்று. 

 

அதன்பிறகு அருண் ஷர்மா என்கிற மெடிக்கல் காலேஜ் டீன் ஒருவரும் மர்மமான முறையில் இறந்தார். அவர் அதிகமாக மது அருந்தியதால் இறந்தார் என்று கூறினர். அதே மெடிக்கல் காலேஜில் அதற்கு முன் டீனாக இருந்தவரும் இதேபோன்று மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடல் எரிக்கப்பட்டு அவர் இறந்தார். அவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்றே கூறினர். லேசர் துப்பாக்கி மூலம் அவர் சுடப்பட்டார் என்பது அதன் பிறகு தெரிந்தது. அதே கல்லூரியில் பணிபுரிந்து வந்த ஆனந்த் ராய் என்கிற கண் மருத்துவர் இதிலிருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

 

இந்த வழக்கில் பல மர்மமான மரணங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. சிவராஜ் சிங் சவுகான் தான் அப்போது மத்தியப் பிரதேச முதலமைச்சர். எந்த நீதிமன்றமும் வழக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறப்பு காவல் படையை நியமித்து தானே இந்த வழக்கை விசாரிப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார். சிறப்பு காவல் படை 20 படித்த இளைஞர்களைக் கைது செய்தது. அதில் 17 பேர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்திருந்தனர். தேர்வு எழுதுவதற்காக தாங்கள் அங்கு வந்ததாக அவர்கள் கூறினர். டிஎன்பிஎஸ்சி  தேர்வு போல் மத்தியப் பிரதேசத்தில் எழுதப்படும் தேர்வு தான் வியாபம். அது ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம். 

 

அதில் தான் இந்த ஊழல் நடந்தது. பொதுவாகவே அந்தப் பகுதி மக்களுக்கு அரசுப் பணியின் மீது அதீத ஆர்வம் இருந்தது. எனவே போட்டி அதிகமாக இருந்தது. 30 வருடங்களுக்கு முன்பிருந்தே வியாபம் ஊழல் தொடங்கியது. ஜெகதீஷ் சாகர் என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டார். இதன் மூலம் அவர் சம்பாதிப்பதை அறிந்துகொண்ட மற்றவர்களும் தங்களுக்கான கிளைகளைத் தொடங்கினர். நன்றாகப் படிக்கும் மாணவர்களைப் பரீட்சை எழுதச் சொல்லி அவர்களுக்கு பணம் வழங்கினர். அரசு வேலைக்கு செல்ல விரும்பி, தேர்வு எழுதுவதற்கு திறமையில்லாமல் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் பேரம் பேசினர். 

 

இதற்கு இடைத்தரகர்களாக பலர் வேலை செய்தனர். யார் கேள்வி கேட்டாலும் அவர்களைக் கொலை செய்தனர். முன்னாள் கல்வி அமைச்சர் ஒருவர் தான் இதில் அதிகம் பணம் சம்பாதித்தவர் என்று சிறப்பு காவல் படை கண்டுபிடித்தது. இது அதிர்வலைகளைக் கிளப்பியது. இறந்துபோன பெண்ணின் மரணம் குறித்து மறுவிசாரணை தொடங்கப்பட்டது. பேசியபடி பணம் கொடுக்காததால் அந்தப் பெண் கொல்லப்பட்டார் என்பது பின்னர் தெரிந்தது.