கொடூரமான தந்தை ஒருவருடைய வழக்கு குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
1993 ஆம் ஆண்டு நடந்த வழக்கு இது. அப்போது காசிமேடு காவல் நிலையத்தில் நான் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தேன். 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மற்றும் அவருடைய குழந்தையை எங்களுடைய ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார். அந்தப் பெண்ணின் கணவர் இன்னொரு குழந்தையைத் தர மறுக்கிறார் என்பது குற்றச்சாட்டு. அந்தப் பெண்ணிடம் நான் விசாரித்தேன். அவர் ஒரு மீனவப் பெண்மணி. வெளியூரில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை அவருடைய கணவர் செய்து வந்தார்.
அவர் வீட்டிற்கு வரும்போது மனைவியுடன் சந்தோஷமாக இருப்பார். அந்த நேரத்தில் குழந்தைகள் அழும். இதனால் கோபமுற்று குழந்தைகள் மீது சிகரெட்டால் சூடு வைப்பார். ஒருமுறை அவ்வாறு இரண்டாவது குழந்தை கத்தியபோது அதன் கழுத்தைப் பிடித்து நெரித்தார். தட்டிக்கேட்ட மனைவியின் கழுத்தையும் நெரித்தார். இதனால் பயந்த மனைவி, முதல் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினார். அதன் பிறகு அவரிடம் சென்று இரண்டாவது குழந்தையைக் கேட்டபோது தர மறுத்தார்.
அதன் காரணமாகவே அந்தப் பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவருடைய கணவரைக் கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். என்ன நடந்தது என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அன்று அவர் கழுத்தை நெரித்ததில் குழந்தை இறந்துவிட்டது என்று. இறந்த குழந்தையை அவன் கடலில் கொண்டுசென்று போட்டான். அதன் பிறகு ஊருக்குத் தப்பியோடிய அவன் மீண்டும் இங்கு வந்தபோது போலீசிடம் மாட்டினான். அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பினேன். கணவர் அடித்ததால் காயம் ஏற்பட்டதாக மனைவி அங்கு தெரிவித்தார்.
குழந்தையும் அப்பா அடித்ததால் தான் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தேன். இந்த சம்பவத்துக்கு சாட்சியாக இருந்தவரையும் அழைத்து விசாரித்தேன். அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அந்தப் பெண் உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் சாட்சி கூறினர். கொலை வழக்கில் பிரேதப் பரிசோதனை என்பது மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பிரேதமே இல்லை. ஆனால் சாட்சிகள் இருந்தன.
நீதிமன்றத்தில் அவனுக்கு 10 வருட தண்டனை கிடைத்தது. அதன்பிறகு அவன் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தான். அது எனக்குத் தெரியாது. சில காலம் கழித்து குடிசைகளுக்கு தீ வைத்த வழக்கில் மீண்டும் அவன் என்னிடம் சிக்கினான். குடிபோதையில் தீ வைத்ததாகக் கூறினான். மீண்டும் தவறு செய்ததால் அவனுக்கு கொடுக்கப்பட்ட பெயில் ரத்து செய்யப்பட்டது. அவனுக்கு 10 வருட சிறை தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்.