இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட நாட்களாகப் பணிபுரிந்த தன்னுடைய அனுபவங்களை “சொல்ல மறந்த கதை” என்னும் தொடர் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராஜ்குமார்.
எல்ஐசி நிறுவனம் மனிதர்களுக்கு மட்டும் காப்பீடு வழங்கியது. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மனிதர்களோடு சேர்த்து அனைத்து பொருட்களுக்கும் காப்பீடு வழங்கியது. கொரோனா காலத்துக்குப் பிறகு காப்பீடு இல்லாத மனிதன் என்றால் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஒருவன் என்று தான் கருதப்படுகிறான். ராக்கெட் கூட காப்பீட்டுடன் தான் செயல்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்குமே காப்பீடு என்பது இருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு நடிகையின் தொடைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல.
இன்சூரன்ஸ் எடுத்துவிட்டு ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கின்றனர். ஒருமுறை நேபாள மன்னர் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம் என்று சொல்லி நகை வாங்க வந்தனர். நீண்ட நேரம் அவர்கள் அங்கு இருந்தனர். அதன் பிறகு நகைகளை சரிபார்த்த போது பல நகைகளைக் காணவில்லை. அந்த மன்னர் குடும்பம் ஆட்டோவில் வந்தது தெரிந்தது. ஆட்டோக்காரர் மூலம் அவர்கள் தங்கியிருந்த இடத்தை அறிந்தோம். மேன்ஷனில் தங்கியிருந்த அவர்களைப் பிடித்தோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
கிட்டத்தட்ட 50 சவரன் நகைகளை அவர்கள் திருடியிருந்தனர். அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டது. வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது எங்களுடைய பணி. எங்களுடைய கணக்குகள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் இல்லையென்றால் வாழ்க்கையை நடத்துவது கஷ்டம். ஆல் ரிஸ்க் பாலிசி என்பது ஒரு பொருளுக்கு அனைத்து வகையிலும் செய்யக்கூடிய காப்பீடு. காப்பீடு மிகவும் முக்கியம் என்பது ஏழை எளிய மக்களுக்குப் புரிய வேண்டும்.