இன்ஸ்பையரிங் இளங்கோ... ஒரு பார்வையற்ற சிறப்புத் திறனாளி சாதனையாளர். சிறப்புத்திறனாளி என்பது வார்த்தை அலங்காரம் அல்ல. உண்மையில் இவர் சிறப்பான பல திறன்களை உடையவர். மிக அழகாக ஆயிரக்கணக்கான பாடல்களை நினைவிலிருந்து பாடக்கூடியவர். ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக லட்சக்கணக்கான மாணவர்களை உந்தி முன்னேறத் தூண்டியிருக்கிறார். பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை பரப்புபவர். இவர் ஒரு வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்டும் கூட... 'பிரின்ஸ் ஜுவல்லரி, பனகல் பார்க்' என்று இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியது 90ஸ் கிட்ஸ்சுக்கு மறந்திருக்காது. உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறை இயற்கை உணவு குறித்த அறிவுரைகளை, வழிகாட்டுதலை பலருக்கும் தருபவர். இப்படி தன் அனைத்து பரிமாணங்களிலும் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவர் இன்ஸ்பையரிங் இளங்கோ. அவர் அடிக்கடி சொல்வது போல, அவருக்கு சைட் (sight) இல்லை, ஆனால் விஷன் (vision) இருக்கிறது. ஆம், நம்மையெல்லாம் விட விசாலமான விஷன் இருக்கிறது. அவரது வாழ்க்கையை, நம்பிக்கையை, மகிழ்ச்சியை பகிர்கிறார், அவரது வார்த்தைகளில்...
புதன் கிழமை ஆகஸ்ட் 15, 1990 ஆம் ஆண்டு. நான் லயோலா கல்லூரியில் ஆங்கிலம் இளங்கலை மூதலாம் ஆண்டு மாணவன். இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். எனது இந்திரா நகர் இல்லத்து அழைப்பு மணி திரும்பத் திரும்ப அடித்த சத்தத்தில் சற்று துயில் கலைந்தவனாய் நான் படுத்துக்கொண்டிருந்தேன். முன் அறையில் படுத்திருந்த அம்சம் என்கிற 50 வயதைக் கடந்த தாயும், இருபதுகளில் இருந்த என் அக்கா சுமதியும் எழுந்து கதவை திறந்திருக்கிறார்கள். திறந்ததும் ஊ..ஊ.. என்று அம்மாவின் மூச்சு விடமுடியாமல் வருகிற குரலும், அக்காவின் அலறிய குரலும் கேட்டு விர்ரென்று எழுந்து நான் முன் அறைக்கு வந்தபோது, ஒரு உருவம் வந்து என் இரண்டு கைகளையும் வன்மையாக அழுத்திப் பிடித்துக்கொள்ள இன்னும் இரண்டு கைகள் என் வாயில் துணியை வைத்துத் திணிப்பதற்கு முயல, நான் போராட எத்தனித்தபோது மேலாடை அணியாத என்னுடைய லுங்கிகூட அவிழ்வதை பொருட்படுத்தாமல் குண்டுகட்டாக இருவரும் சேர்ந்து என்னை அழுத்தி தூக்கிக்கொண்டார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அப்போழுதுதான் விழித்திருக்கிற என்னால் உடனடியாக செயலாற்ற முடியவில்லை. கனப்பொழுதில் என்னை வெளியே கொண்டுவந்து டாடா சுமோவில் உள்ளே தள்ளி கதவை மூட முயன்றபோது, எனக்கு எங்கிருந்துதான் அந்த பலம், ஆற்றல் வந்ததோ தெரியாது. காலினால் உதைத்துக்கொண்டு வெளியே குதித்து, விழுந்து, எழுந்து அவர்களையெல்லாம் என் பலம் பொருந்திய அளவிற்கு குத்தினேன், கைகளை வீசித் தாக்கினேன். அந்தத் தாக்குதலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லையோ என்னவோ என்னை விட்டு விட்டு அவர்கள் ஓடிவிட்டார்கள்.
நான் வீட்டிற்குள் செல்ல முயன்றபோது எனது வலதுகைப் பக்கம் என் அக்காவின் அலறலும் கேட்டுக்கொண்டிருந்த காரணத்தால் அவரை நோக்கிச் சென்று பார்த்தபொழுது அக்கா கீழே கிடப்பதும் இரண்டுபேர் அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டும் இருந்தார்கள். அவர்களையும் நன்றாக என்னால் முடிந்த அளவிற்கு அடிக்கிறேன். எப்படியோ அவர்களும் என் கைகளுக்குப் பிடிபடாமல் ஓட, எழுந்த என் சகோதரியின் பின் கழுத்தைப் பிடித்து வீட்டிற்குள்ளே தள்ளி கதவை மூடிவிட்டு. அப்போது கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துண்டைக் கட்டிக்கொண்டு, கையில் எதாவது ஆயுதம் வேண்டுமே என்று தேடுவதற்கு நேரம் இல்லாத காரணத்தால், உடனே அடுப்பங்கரைக்குச் சென்று அங்கு காஸ் சிலிண்டரின் மேலே தொங்கிக்கொண்டிருந்த அரிவாள்மனையை எடுத்துக்கொண்டு அம்மாவையும் அக்காவையும் வெளியே வராதீர்கள் என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினேன்.
நான் அரிவாள்மனையை நாலாபுறமும் வீசித் தாக்கிய போது இரண்டு மூன்று மண்டைகளிலும், உடலின் மற்ற பாகங்களிலும் அது பட்டது எனக்கு நிச்சயமாக தெரியும். ஆ.. ஊ.. என்ற சத்தத்தோடு மனிதர்கள் ஓடும்போது அந்த சத்தம் கேட்ட திசையில் நான் ஓடினேன். அவர்களை என்னால் பிடிக்க முடியவில்லை என்ற வருத்தம், எரிச்சல், கோபத்தின் உச்சியில் நான் என்ன செய்வதென்று தெரியாமல் என் வீட்டிற்கு முன் நின்றிருந்த அவர்களின் வண்டியை என் அறிவாள் மனையால் அடிக்கத்தொடங்கினேன். வண்டியின் பக்கவாட்டிலிருந்த கண்ணாடிகளெல்லாம் சுக்குநூறாக உடைந்து விழத்தொடங்கின. மீண்டும் மீண்டும் என் கோபத்தையெல்லாம் காட்டி அடிக்கும்போது என் கைகளிலும்கூட கண்ணாடித் துண்டுகள் உடைந்து விழந்து சிராய்ப்புகள் ஏற்பட்டு எனது வலதுகை ஈரமாகிப்போனது என் ரத்தத்தால். அப்போது என் வாய்க்கு என்னவெல்லாம் கெட்டவார்த்தைகள் வந்தனவோ அவற்றையெல்லாம் என் உச்சித்தொண்டைக் கிழியும் அளவிற்கு கத்தி அடித்துக்கொண்டிருந்தபோது என் தாய் வந்து என்னை ஆட்கொண்டு என் கையில் இருந்த அறிவாள்மனையைப் பிடுங்கி, 'வா வந்துவிடு அவர்களெல்லாம் ஓடிவிட்டார்கள்' என்று கூறினார்.
இப்படியொரு வன்முறைக் காட்சி அரங்கேறும்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் திரண்டுவிட்டார்கள். அதில் ஒரு பூக்கார பெண்மணி வந்தவர்களை சத்தம்போட்டுத் திட்டினார். அவர் சொன்னதன் சாராம்சம், 'உங்களுக்குள் குடும்பத்தகராரு ஏதாவது இருந்தால் உங்களுக்குள்ளாகவோ, காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலமோ தீர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியெல்லாம் வன்முறை செய்யக்கூடாது. நாங்களெல்லாம் அமைதியாகவும் நட்போடும் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த இடத்தில் இந்த இரவில் கொள்ளைக்காரர்கள் போல் வந்து தகராரு செய்யக்கூடாது என்பதுதான். என்ன இது குடும்பத் தகராரு என்கிறார் என நினைக்கிறீர்களா? ஆம், ஆயுதங்கள் நிரம்பிய டாடா சுமோவில் ஐந்தாறு நபர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுக்கு தலைமை தாங்கி வந்தவர் என்னைப் பெற்ற என் சொந்த அப்பாதான்.
என் அப்பா நான் யூகேஜி படிக்கும்போது அவர் இரண்டாவது மணம் செய்துகொண்டார். அந்த மனைவி இறந்தபிறகு மூன்றாவது திருமணமும் செய்துகொள்ள முயன்றார். அன்றாடம் மது அருந்திவிட்டு வந்து என் அம்மாவை துன்புறுத்துவதும் நான் அம்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் நடந்துகொண்டிருந்தது, ஒரு கட்டத்தில் நான் அவரை தள்ளிவிட்ட நிகழ்ச்சிகளுக்கு உச்சமாகத்தான் இந்த நிகழ்ச்சியும் நடந்தது. என்னுடைய அக்கா எங்கள் குடும்பத்திற்கோ, எங்கள் உறவுகளுக்கோ சம்மந்தம் இல்லாத ஒரு மனிதரைக் காதலித்தார். என் அம்மாவிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் நான் முயன்று அவர்களுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், அது என் தந்தைக்குப் பிடிக்காமல் எங்கள் இருவரையும் கடத்திச்சென்றுவிட்டால் என் தாயின் கொட்டம் அடங்கிவிடும், கர்வம் அடங்கிவிடும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார்.
அதன்பிறகு அண்டை அயலாருடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததுதான் எனக்குத் தெரிந்தது. 'இப்போது அனைவரும் வந்துவிட்டார்கள். நான் போகிறேன்' என்று என்னிடம் சொல்லிவிட்டு என் அம்மாவும் என் அப்பா தரப்புடன் பேசும்போது, எதிர்தரப்பில் இருந்து வைக்கப்பட்ட வாதம் இதுதான். 'நான் என் குழந்தைகளுக்கு நல்லது செய்வதற்குத்தான் கடத்திச் செல்ல வந்திருக்கிறேன். காலால் சிறுநீர் கழிக்கும் இவளுக்கு இவ்வளவு திமிர் இருக்கிறது? ஒரு பொட்ட சிறுக்கிக்கு இவ்வளவு திமிர் இருந்தால்...' என்றெல்லாம் அனாவசியமாக அவர் பேசும்போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் வெளியே வந்து "நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானலும் பேசுங்கள். ஆனால் என் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசினால் என்னால் சும்மா இருக்க முடியாது" என்று சொன்னேன். விவாதங்கள் தொடர்ந்தன. நிறைவாக எல்லோரும் பேசி சத்தம்போட்டு அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த நாள் நான் எனது லொயோலா கல்லூரியின் டீன் ஆஃப் ஸ்டூடண்ஸ் அஃபேர்ஸ் பேராசிரியர் செல்லய்யாவுடைய உதவியோடு, கல்லூரி முதல்வர் பேராசிரியர் அருட்தந்தை லியோ கொரியாவுடைய துணையோடு அப்போதிருந்த காவல் ஆணையர் ராஜசேகர் நாயரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்ததன் பேரில் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு என் தந்தை அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவார் என்ற வகையில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அந்தத் தெருப் பக்கமே வரக்கூடாது என்ற நிபந்தனையோடு எச்சரித்து அனுப்பப்பட்டார். ஆனால், அவர் என் தாய்க்குக் கொடுத்த அறைக்கூவல் என் மனதை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது.
அந்த அறைக்கூவல் என்னவென்றால். அவர் சொன்னவற்றை அவர் சொற்களில் அப்படியே சொல்கிறேன். “பொட்டயனை வச்சுக்கிட்டு இவ்ளோ துள்ளுற நீ. எல்லா குருடங்களும் பிச்சை எடுக்கிற மாதிரி நீயும் அவங்களோட சேர்ந்து பிச்சை எடுப்ப. அப்போ என்கிட்டதான் வரணும். நான்தான் உனக்குப் படியளக்கணும்” என்று சொன்னார்.
இப்படி சொன்ன அப்பா, பின்னாளில் என்ன சொன்னார்? எப்படி ஆனார்? நடு இரவில் என்னை ஆளை அழைத்து வந்து அடித்த என் அப்பாவை நான் எப்படி திருப்பியடித்தேன்? அடுத்த பகுதியில் சொல்கிறேன்...
என்னுடன் பேச... inspiringilango@gmail.com
அடுத்த பகுதி :
'கை'விட்ட தந்தை... நம்பிக்'கை' வைத்த தாய்... ஓங்கியது யார் கை? திருப்பி அடி #2