நீட் தேர்வுக்குப் படிக்கச் சொல்லி மகனை டார்ச்சர் செய்த பெற்றோருக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
நீட் தேர்வுக்குக்காக பயிற்சி பெற்றுவந்த 12வது படிக்கும் ஒரு பையன் தன் படிப்பு சுமைக் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துள்ளான். இதனால் அவனது பெற்றோர் என்னிடம் அந்த பையனை அழைத்து வந்து, மோட்டிவேஷன் கொடுங்கள் என்று கூறினர். அந்த பையனிடம் நான் பேசும்போது, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து தளர்ந்த நிலையில் இருக்கும் பெரியவர்கள் போல் அவனின் மனநிலை இருந்தது. அவனிடம் என்ன கேள்விகேட்டாலும் அதற்கு மேலோட்டமான பதிலையே கூறினான். தொடர்ந்து அவனிடம் பேசும்போது டீன்ஸ் பருவத்திற்கான துள்ளலான எந்த நடவடிக்கையும் இல்லாமல் மிகவும் சோர்வாக இருந்தான். தொடர்ந்து அந்த பையனிடம் பேசும்போது, நீட் தேர்வுக்கான பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் இல்லையென்றால் சுற்றி இருக்கும் நண்பர்கள் தவறாக நினைப்பார்கள் என்று வேதனையுடன் கூறினான்.
இதையெல்லாம் கேட்ட பிறகு அந்த பையனின் பெற்றோர்களிடம், வெறும் மோட்டிவேஷன் மட்டும்தான் தர முடியும், ஆனால் உங்களின் பையனை படிக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தி மன ரீதியாக சோர்வடைய வைத்துள்ளீர்கள். படிப்பு என்பது எதிர்காலத்தில் என்ன வேலை செய்தாலும் அதற்கு உதவியாக இருக்கும் அவ்வளவுதான். அதற்காக நீங்கள் நினைப்பதைத்தான் உங்கள் பையன் செய்ய வேண்டும் என்று திணிக்கக் கூடாது. எப்போதுமே முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமெனக் குழந்தையை டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினேன். ஆனால் அந்த பையனுக்கு என்னால் தீர்வை கொடுக்க முடியவில்லை. அதற்கான வாய்ப்பை அந்த பெற்றோர் துளி அளவு கூட ஏற்படுத்தித் தரவில்லை. நான் நேரடியாக அந்த பையனின் பெற்றோரிடம், உங்களின் பையன் எதிர்காலத்தில் தவறான முடிவை எடுத்துவிடக்கூடாது. முடிந்ததை முயற்சி செய்யச் சொல்லுங்கள் என்று கூறி, தொடர்ந்து என்னுடன் தொடர்பில் இருக்கச் சொல்லி நம்பரை கொடுத்தேன். தற்போது அந்த பையன் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறானோ அப்போதெல்லாம் என்னைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறான். முன்பு இருந்ததைவிட இப்போது மன உறுதியாக இருக்கின்றான்.