பள்ளியில் படிக்கும் சக மாணவிகள் கேலி கிண்டல் செய்ததால், வீட்டிலேயே முடங்கி மற்றவர்களிடம் பேசுவதற்கு பயந்து தன்னம்பிக்கை இழந்த சிறுவனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விவரிக்கிறார்.
தன்னுடைய ஆறாம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை தன்னம்பிக்கை இல்லாமல் தனித்தே இருப்பதாக கவலைப்பட்டு பெற்றோர் ஆலோசனைக்கு வந்தனர். தன்னை விட வயது குறைந்த குழந்தைகளிடம் கூட குழந்தை பயப்படுகிறது. பெற்றோர் குழந்தைக்காகவே எல்லாரிடமும் பழக வேண்டும் என்று வசித்து வந்த இடத்தை விட்டு காலி செய்து வேறு பகுதிக்கு குடியேறியிருந்தனர். இருந்தும் குழந்தை எங்கும் வெளியே விளையாட செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்திருக்கிறது.
பொதுவாக இப்படி தன்னம்பிக்கை இல்லாத குழந்தைகளிடம் காணொளி மூலம் பேசுவது ரொம்ப கடினம். அவர்கள் முகத்தை காட்ட மாட்டார்கள். அப்படி இருக்க முகத்தை மறைத்து கொஞ்சம் சங்கடப்பட்டு தான் அந்த பையன் என்னிடம் பேசினான். காணொளி மூலம் கவுன்சிலிங் நடந்தது. என்ன பிரச்சனை என்ன என்று விசாரித்ததில் பள்ளியில் மூன்று பெண் குழந்தைகள், குழந்தையை கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்த குழந்தை கண்ணாடி போடுவது, படிப்பது, நடப்பது போன்ற அனைத்தையும் அவர்கள் கிண்டல் செய்து பாடி ஷேமிங் செய்துள்ளனர். ஆதரவு கொடுக்கக் கூட நண்பர்கள் இல்லை. டீச்சரிடம் சொன்னாலும் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டனர். இவரை மட்டுமல்லாமல் அவரது பெற்றோரையும் சேர்த்து அந்த 3 பெண் குழந்தைகள் கிண்டல் செய்துள்ளனர். இதனால், வெளியே செல்ல பயந்து வீட்டிலேயே முடங்கி தன் மேலே நம்பிக்கை இழந்து யாரிடமும் பேச விரும்பாமல் பையன் இருந்துள்ளான்.
தன் மேலே நம்பிக்கை இழந்து யாரிடமும் பேசுவதற்கு நெருக்கம் காட்டாமல் இருந்திருக்கிறான். ஆனால் பெற்றோர்கள் அவனுக்கு என்ன நடந்தாலும் வெளியே சொல்வது இல்லை என்ற கவலை கொண்டனர். எனவே அந்த பையனிடம் அவனிடம் இருக்கும் நல்ல குணங்களை அவன் மூலமாகவே எழுத வைத்தேன். நிறைய எழுத வைத்து அவன் மீது கொஞ்சம் நம்பிக்கை வரும்படி செய்துவிட்டு பின் மெல்ல அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று சொன்னேன். பள்ளியில் எல்லா டீச்சரும் உனக்கு கோபமாக இருந்திருக்க மாட்டார்கள். ஏதேனும் உனக்கு பிடித்த ஆசிரியரிடம், தான் நடந்து போகும்போது அவர்கள் இப்படி கிண்டல் செய்வதை அந்த ஆசிரியரையே கவனிக்க சொல் என்று சொல்லி அடுத்து என்ன நடந்தாலும் எந்தெந்த இடத்தில் எல்லாம் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி குடுத்தேன்.
தனக்கு பிடிக்காததை குரல் கொடுத்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கவுன்சிலிங் வந்தது சரி, ஆனால் எல்லா நேரமும் நான் கூட இருக்க முடியாது. எல்லோருமே தன் வாழ்நாளில் ஏதோ ஒரு காலகட்டத்தில் புல்லிங்கை எதிர்கொள்ளதான் செய்வார்கள். எனவே நீங்கள் தான் அந்த குழந்தைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. குரல் கொடுக்காத விஷயம், வீட்டில் இருந்து தான் முதலில் வந்திருக்கும். பெற்றோர்கள் பொதுவாகவே பிள்ளைகளிடம் நோ சொல்வதே கிடையாது, சொல்ல விடுவதும் கிடையாது. பிள்ளைகள் ஏதேனும் தனக்கு இப்பொழுது வேண்டாம் என்று சொன்னால் இல்லை இப்போது தான் செய்ய வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தி செய்ய வைக்கின்றனர்.
அதனால் அவர்கள் வீட்டில் நோ சொல்லி பெற்றோர்களிடம் பழகாததால் வெளியிலும் தன்னை யாராவது புல்லிங் செய்தாலோ, அல்லது கிண்டல் செய்தாலோ அதற்கு நோ சொல்லத் தெரியவில்லை. தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்று அந்த பிள்ளைக்கே தெரியவில்லை. ரொம்பவும் செல்லமும் கொடுக்கக்காமல் குழந்தைகளுக்கு எல்லைகளும் சொல்ல வேண்டும். அதை சொன்னாலே குழந்தைக்கு புரிந்து கொள்ளும். உதாரணத்திற்கு குழந்தைகள் பார்ட்டிக்கு அல்லது தப்பான இடத்திற்கு தவறி சென்றுவிட்டால் கூட, அங்கே ஏதாவது டிரிங்கோ இல்ல ஏதாவது என்றால் அந்த குழந்தைக்கு நோ சொல்ல தெரிய வேண்டும். பேரன்ட்ஸ் இப்படி ஸ்ட்ரிக்ட்டாக வைத்திருந்தால் அந்த குழந்தை அங்கேயும் வேண்டாம் என்று சொல்ல தயங்கும். எனவே இப்படி பலவாறு எடுத்து சொல்லி ஆதரவு அளித்து, உன்னை தவிர வேறு யாரேனும் அந்த பிரெண்ட்ஸ் கிண்டல் செய்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. அப்பொழுது உன்னை மட்டும் ஏன் கிண்டல் செய்கிறார்கள் என்றால் நீ எதுக்கும் நோ சொல்வதில்லை வாய்ஸ் அவுட் பண்ணுவதில்லை, அதனால் தான் உன்னை டார்கெட் செய்கிறார்கள். உனக்கு பிடிக்கவில்லை என்றால் நோ சொல்ல வேண்டும். நீ கண்ணாடி போடுகிறாய் என்றால் உன்னுடைய தேவைக்கு நீ போடுகிறாய் முதலில் செல்ப் லவ் செய்தாலே அதை மற்றவர்கள் கிண்டல் செய்யும்போது உனக்கு அது உறுத்தாது. கவுன்சிலிங்கை பொறுத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று சிலர் விட்டுவிடுவார்கள். சில பெற்றோர்கள் இதை ஆரம்பத்திலேயே உணர்ந்து சரி செய்ய நினைப்பார்கள். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர் என்பதை நினைவில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும்.