தனது 10 ஆவது வயதில் சேதுங் பள்ளியிலிருந்து வெளியேறி எங்காவது ஓடிவிட வேண்டும் என்று நினைத்தான். கால்போன போக்கில் நடந்தான். தொலைதூரத்தில் புதிய நகரம் இருப்பதாகவும், அதை நோக்கி பயணிப்பதாகவும் நினைத்துக் கொண்டான். எங்கெங்கோ சுற்றினான். மூன்று நாட்கள் சுற்றிய பிறகு மகனைக் காணவில்லை என்று தேடிய பெற்றோர் அவனைக் கண்டுபிடித்துவிட்டனர்.
ஆக, அவன் தனது ஊரையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறான் என்பது அப்போதுதான் புரிந்தது. மொத்தத்தில் அவனுடைய மூன்று நாள் பயணம் வெறும் 3 கிலோமீட்டருக்கு உள்ளாகவே இருந்திருக்கிறது. வீட்டுக்கு திரும்பியபிறகு நிலைமையில் மாற்றம் இருந்தது. பெற்றோர் அணுசரணையாக இருந்தனர். ஆசிரியரும் அவனிடம் மென்மையாக நடந்துகொண்டார். தனது எதிர்ப்பு நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததை உணர்ந்தான். அதை ஒரு வெற்றிகரமான வேலை நிறுத்தமாக கருதினான். மீண்டும் பள்ளிக்குச் சென்றான். முந்தைய இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்த வரிகளுக்கு ஆசிரியர்கள் பொருள் சொல்லத் தொடங்கினார். கன்பூஷிய சிந்தனைகளை கற்றிருப்பது சீன அறிவுத் துறையில் மிக முக்கியமான விஷயமாக கருதப்பட்டது. அந்த இலக்கியத்தில் மாவோவின் மனதில் பதிந்த ஊக்கமளிக்கும் பகுதிகள் ஏராளமாக இருந்தன.
"மனிதர்கள் தங்கள் சொந்த முயற்சிகளையே சார்ந்திருக்க வேண்டும்....உலகம் முழுவதிலும் சாத்தியமற்றது எதுவுமில்லை, துணிவுடன் செயல்பட விரும்புவது மனிதனின் உள்ளம் மட்டும்தான்" என்ற கருத்துகள் 12 வயதுச் சிறுவனான மனதிலேயே ஆழமாக பதிந்துவிட்டன. அதுபோலவே, கடந்த காலத்தை அறிந்து கொள்வதின் முக்கியத்துவத்தையும் இந்த இலக்கியங்கள் அவனுக்கு புரியவைத்தன.
ஆட்சி, மோசமான ஆட்சி, வம்சங்களின் எழுச்சி, வீழ்ச்சி, பழங்கால நிகழ்வுகளையும் நவீனக்கால நிகழ்வுகளையும் நேரில் காண்பதுபோல புரிந்துகொள்ளும்வரை இந்த நம்பகமான வரலாற்றுப் பதிவுகளை வரலாற்று மாணவன் ஆராய வேண்டும் என்று அந்த நூல் அறிவுறுத்தியது. தனது பள்ளியில் படிக்கும் நேரத்திலேயே தங்களுடைய நிலத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்யத் தொடங்கினான். தந்தை வற்புறுத்தியதால் மணிச் சட்டத்தைப் பயன்படுத்தி கணக்குப் போடுவதற்கு கற்றுக் கொண்டான். பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வந்தவுடன் மாலைப் பொழுதுகளில் குடும்பத்தின் அன்றாட வரவு செலவுகளைப் பார்க்க முடிந்தது.
மாவோவின் தந்தை கோபக்காரராக இருந்தார். கருமியாக இருந்தார். பல சமயங்களில் மாவோவையும் அவருடைய சகோதரர்களையும் அடிப்பவராக இருந்தார். எப்போதும் மாவோவை குறைகூறுவார். அவன் எதைச் செய்தாலும் அதில் ஒரு குறையைக் கண்டுபிடிப்பார். மாவோவின் வீட்டில் இரண்டு கட்சிகள் இருந்தன. அவனுடைய தந்தைதான் ஆளுங்கட்சி. மாவோவின் தாய், அவனுடைய தம்பி, சில நேரங்களில் அவர்களுடைய வேலையாட்கள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கட்சியாகி விடுவார்கள்.
தந்தையிடம் நேரடியாக எதிர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது என்பது தாயின் நிலைப்பாடு. ஆனால், மாவோ தனது தந்தையிடம் நேருக்கு நேர் எதிர்த்து பேசுவான். தான் படித்த இலக்கிய நூல்களில் இருந்து அழகான் மேற்கோள்கைக் காட்டுவான்.
"என்னை சோம்பேறி என்கிறீர்களே, கன்பூஷிய இலக்கியங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? இளையோரிடம் மூத்தவர்கள் கருணையுடனும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும். இளையவர்களைவிட பெரியவர்கள் மேலும் அதிகமாக வேலை செய்ய வேண்டும். உங்கள் வயதுக்கு நான் வரும்போது நானும் உற்சாகமாகவும் ஊக்கத்தோடும் இருப்பேன்"
இப்படி மாவோ தனது தந்தையை மடக்குவான்.
ஒருமுறை அவனுடைய வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தார்கள். அவர்கள் முன்னிலையில் மாவோவை சோம்பேறி என்றும் எதற்கும் லாயக்கில்லாதவன் என்றும் திட்டினார். உடனே, மாவோ தனது தந்தையை திட்டிவிட்டு கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். உடனே, தனது மகனை சமாதானப் படுத்துவதற்காக தாயும் அவனுக்குப் பின்னால் ஓடினார். அவருக்குப் பின்னால் கோபமாக கத்தியபடியே மாவோவின் தந்தையும் சென்றார். மாவோ ஒரு குளத்தின் கரையில் போய் நின்று கொண்டான்.
"அவரைப் போகச் சொல். அவர் வந்தால் நான் குளத்தில் குதித்துவிடுவேன்"
என்று தனது தாயை நோக்கி கத்தினான் மாவோ. அப்போது மாவோவுக்கு வயது 13. மாவோவை வீட்டுக்குத் திரும்பும்படி ரென்ஷெங் உத்தரவிட்டார். அவன் படியவில்லை. வீட்டுக்கு திரும்பினால் அவர் அடிக்கக் கூடும் என்று நினைத்தான். "இரண்டு கால்களாலும் மண்டியிட்டு தலையை நிலத்தில் தொட்டு வணங்கு" என்றார் ரென்ஷெங். "முடியாது. நீங்கள் என்னை அடிப்பதில்லை என்று உறுதியளித்தால், ஒரு காலில் மண்டியிடுகிறேன்" என்றான் மாவோ.
ஒருவழியாக அந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு, இருவருக்கும் இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டது. கலகம் செய்து வெளிப்படையாக உரிமையைக் கோரினால் தனது தந்தை மடங்குவார் என்று புரிந்து கொண்டான். தனக்கு பிடிக்காததை எதிர்க்கும் குணம் வளர்ந்தது. அதேசமயம், மாவோ தனது வேலைகளை முறையாக கவனிக்கவும் இந்த சண்டைகள் உதவின. தனது வேலைகளில் முறையாக இருந்தால்தான் தனது வார்த்தைகளுக்கு மதிப்பிருக்கும் என்று மாவோ நினைத்தான்.
13 வயதில் பள்ளி வாழ்க்கை முடிந்து முற்றிலும் வெளியே வந்தான் மாவோ. பள்ளியில் படித்த சமயத்திலேயே, சீனாவின் பழங்கால இலக்கியங்கள் அவனைக் கவரவில்லை. சீனாவின் காதல் கதைகள், கலகங்களைப் பற்றிய கதைகளை அவன் விரும்பிப் படித்தான். இந்த நூல்களை அவன் படிக்கக் கூடாது என்று தந்தையும், ஆசிரியர்களும் தடுத்தனர். இந்த நூல்கள் சூழ்ச்சி நிரம்பியவை என்று மாவோவின் ஆசிரியர் கூறுவார். இருந்தாலும் வகுப்பில் மற்ற புத்தகங்களுக்குள் இவற்றை மறைத்து வைத்து படிப்பான்.
இந்தியாவுக்கு பயணம் செய்த யுவான் சுவாங் எழுதிய மேற்கில் மேற்கொண்ட பயணங்கள் என்ற நூலையும், யோஃபெங் வரலாற்றுச் சித்திரங்கள், நீரின் ஓரம், டாங்கிற்கு எதிரான எழுச்சி, மூன்று அரசுகள் உள்ளிட்ட நூல்களையும் அவன் படித்து முடித்திருந்தான். இந்தக் கதைகளைப் பற்றி கிராமத்துப் பெரியவர்களைக் காட்டிலும் மாவோவும் அவனுடைய நண்பர்களும் கூடுதலாகவே அறிந்திருந்தனர். தங்களுக்குத் தெரியாத பல கதைகளை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இந்தக் காலகட்டத்தில் வயலில் கூடுதல் நேரம் வேலை செய்தான். இரவு நேரத்தில் தந்தையின் கணக்கு வழக்குகளை எழுதினான். கிடைக்கிற எல்லா நூல்களையும் படித்தான். இதை அவனுடைய தந்தை விரும்பவில்லை. தனது அறையில் வெளிச்சம் வெளியே தெரியாமல் மறைத்து படித்தான். மாவோவுக்கு 14 வயது ஆனது. அந்தச் சமயத்தில் அவனைவிட 4 வயது மூத்த உறவுக்காரப் பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். அந்தப் பெண்ணின் பெயர் லா. இந்தத் திருமணத்தை மாவோ விரும்பவில்லை. அந்தப் பெண்ணுடன் மாவோ சேர்ந்து வாழவே இல்லை. திருமணம் முடிந்த சில நாட்களில் மாவோ வீட்டைவிட்டு வெளியேறினார். சட்டம் படித்துக் கொண்டிருந்த தனது நண்பர் ஒருவருடன் தங்கிவிட்டார்.
பின்னாளில் அந்தப் பெண்ணை மாவோவின் தந்தை சேர்த்து வைத்திருந்தார். இதன் விளைவாக மாவோவின் தாய் தனது கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கேயே அவர் இறந்தார். "நேர்மையில்லாத எனது அப்பாவின் மீது ஏற்பட்ட வெறுப்புதான் என் அம்மாவின் மரணம்" என்று தனது தாயின் இரங்கல் கூட்டத்தில் பேசினார் மாவோ. தனது திருமணத்தை மாவோ ஏற்கவில்லை. அவர் தனது வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். தனது நண்பருடன் தங்கியிருந்த நாட்களில், மாவோ ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதை அவருடைய தூரத்து சகோதரர் ஒருவர் கொடுத்தார்.
"ஒரு வளமான எதிர்காலத்துக்கு எச்சரிக்கை" என்ற தலைப்பிலான அந்த நூலை ஷாங்காய் நகர தரகு முதலாளி ஒருவர் எழுதியிருந்தார். சீனாவில் மேற்கத்திய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று அந்த நூலில் அவர் எழுதியிருந்தார். மாவோவின் கிராமத்தில் மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது. கட்டை வண்டிகள் மட்டுமே அவர்கள் அறிந்த வாகனம். ஆனால், தொலைபேசிகள், நீராவிக் கப்பல்கள், ரயில் போக்குவரத்து போன்ற மாவோ அறியாத விஷயங்கள் அதில் விவரிக்கப்பட்டு இருந்தன. வயலில் முழுநேரமும் வேலை செய்துகொண்டிருந்த மாவோவின் கற்பனையாற்றலை இந்த நூல் தூண்டிவிட்டது.
சில மாதங்களில் இன்னொரு துண்டுப் பிரசுரத்தை அவர் படித்தார். "அய்யோ! சீனா அடிமைப்படப் போகிறது!" என்ற தலைப்பிலான் அந்த பிரசுரம் அவருக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரியாவையும், சீனாவுக்குச் சொந்தமான தைவான் தீவையும் ஜப்பான் ஆக்கிரமித்த விதத்தை அந்த பிரசுரம் தெளிவாக தெரிவித்திருந்தது. இந்தோ சீனாவிலும் பர்மாவிலும் சீனா தனது மேலாதிக்க நிலையை இழந்த விதத்தையும் அது விவரித்தது. இதைப்படித்த மாவோ, தனது தாய்நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி கவலை அடைந்தார். நாட்டைக் காப்பாற்றுவது அனைவருடைய கடமை என்று நினைத்தார்.
வயலில் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை. மீண்டும் படிக்க வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து அந்த கிராமத்தில் இருந்த தனியார் பள்ளி ஒன்றுக்கு சென்றார். அதை மாவோவின் குலமரபைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் நடத்திவந்தார். ஒரு ஆண்டு அங்கு படித்தபிறகு, இளம் மாணவர்களுக்கான நடுநிலைப் பள்ளியில் சேர விரும்பினார். அந்தப் பள்ளி மாவோவின் தாய் பிறந்த ஊரான ஹிஸியாங் ஹிஸியாங் என்ற பகுதியில் இருந்தது. அங்கு மாவோவின் சித்தப்பா பையன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். நவீனக் கல்வியில் ஏற்பட்டுவரும் மாறுபட்ட நிலைமைகளை அவன்தான் மாவோவிடம் கூறினான். மேற்கத்திய நாடுகளின் புதிய அறிவு அங்கு புகட்டப்படுகிறது. கல்வி கற்பிக்கும் முறைகளும்கூட தீவிரமானதாக அமைந்திருக்கிறது என்று மாவோவின் ஆர்வத்தை தூண்டினான்.
ஆனால், ஐந்து மாதத்திற்கான் தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்குச் சேர்த்து அப்போதைய நிலையில் ஆயிரத்து 400 சீன செப்புக் காசுகளை பள்ளிக்குச் செலுத்த வேண்டும். "இவ்வளவு பணம் செலவழித்து முன்னேறி கல்வியைப் படித்து என்ன செய்யப் போகிறாய்?" மாவோவின் விருப்பத்தை அவனுடைய தந்தை ஏற்கவில்லை. ஆனால், அவருடைய நண்பர் ஒருவர் மாவோவுக்கு ஆதரவாக பேசினார். "நல்ல கல்வியை கற்றால், மாவோவின் சம்பாதிக்கும் ஆற்றல்தானே அதிகரிக்கும்"இந்த வார்த்தைகளில் அவர் மயங்கினார். உடனே மாவோவுக்கு பண உதவி செய்ய அவர் ஒப்புக் கொண்டார்.
முதல்முறையாக தனது ஊரிலிருந்து 20 கிலாமீட்டர் தூரம் வெளியே செல்கிற வாய்ப்பு மாவோவுக்குக் கிடைத்தது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்தாலும், தங்களுடைய கிராமத்தின் எல்லையைத் தாண்டி வாழ்க்கையில் வெற்றிபெறும் வாய்ப்பு தனது மகனுக்கு இருப்பதை மாவோவின் தந்தை உணர்ந்தார். இதன் காரணமாகத்தான் அவர் தனது மகனின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தடையின்றிச் செய்தார்.