Skip to main content

ஈகோவை தூண்டியதால் குடியை நிறுத்திய அதிகாரி - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 09

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

 jay-zen-manangal-vs-manithargal-09

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்தும் அனுபவங்கள் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியே நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனிநபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒருவர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள். உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து போன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார்.

 

என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார். இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.