Skip to main content

கொரியா இணைப்பை நோக்கிய இறுதி முயற்சி! கொரியாவின் கதை 22

Published on 17/11/2018 | Edited on 27/11/2018
koreavin kathai

 

தென்கொரியாவின் 19 ஆவது ஜனாதிபதியான மூன் ஜாயே-இன் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர். தென்கொரியாவில் உள்ள கொரியா இணைப்பு மனநிலையைப் புரிந்துகொண்டவர்.

 

தென்கொரியா தேர்தல்களில் கொரியா இணைப்பை விரும்பும் 40 சதவீதத்திற்கு அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்தான் வெற்றிபெறும் வாய்ப்பை பெறுவார்கள். முந்தைய சர்வாதிகார அரசுகள் அனைத்தும், மக்கள் ஆதரவை முழுமையாக பெறமுடியாதவை. அதற்காகவே தேர்தல்களில் மோசடியை கையாண்டவை.

 

1998 ஆம் ஆண்டு ஜனாதிபதியான கிம் டாயே-ஜங் தென்கொரியா மக்களின் விருப்பதை உணர்ந்து வடகொரியாவுடன் இணைக்கமான உறவை விரும்பி அதற்காகவே சன்ஷைன் கொள்கையை உருவாக்கினார். தென்கொரியா உருவான பிறகு வடகொரியா சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார்.

 

இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் நிலவிய பதற்றத்தை முதன்முதலில் தணித்து சுமுகமான இணைப்பு முயற்சிக்கு தொடக்கப்புள்ளியை வைத்தவர் கிம். அவரைத் தொடர்ந்து ரோஹ் மூ-ஹ்யுன் ஜனாதிபதி ஆனபோதும் அதே அணுகுமுறையைக் கையாண்டார். இரு நாட்டு எல்லையைத் தாண்டி நடைபயணம் மேற்கொண்ட முதல் ஜனாதிபதியானார். மக்கள் சந்திப்புக்கும் வழி ஏற்படுத்தினார். வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் அடக்குமுறைகளை முதன்முதலில் பகிரங்கமாக எதிர்த்த ஜனாதிபதியாகவும் ரோஹ் இருந்தார்.

 

koreavin kathai

 

அதன்பிறகு, ஜனாதிபதியான லீ மியுங்-பாக், அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியான பார்க் ஜியன்-ஹியே ஆகியோர் அமெரிக்காவை திருப்தி செய்யும் வகையில் வடகொரியாவை புறக்கணித்தனர்.

 

அமெரிக்காவின் ஆதரவாளராக தங்களைக் காட்டிக்கொண்ட லீ லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறையும் 1300 கோடி கொரியா வொன் அபராதமும் விதிக்கப்பட்டார்.

 

அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவை அனுசரித்துப்போன பார்க் ஜியன்-ஹியேவும் பதவியில் இருக்கும்போதே நாடாளுமன்றத்தால் பதவி பறிக்கப்பட்டார். பின்னர் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் கைதாகி, 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆயிரம் கோடி கொரியா வொன் அபராதமும் விதிக்கப்பட்டார்.

 

இந்நிலையில்தான் 2017 தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் மூன் ஜாயே-இன். தொடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதியான ரோஹ் மூ-ஹ்யுன்னுடன் இணைந்து மனித உரிமைகளுக்காக வழக்காடும் வழக்கறிஞர் குழுவில் இருந்தார். மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், மாணவர்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு எதிரான அரசு நடவடிக்கைகளை எதிர்த்து வாதாடினார்கள். 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தற்கொலை செய்துகொள்ளும்வரை நண்பராகவே தொடர்ந்தார்.


 

koreavin kathai



 

ரோஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருடைய பிரச்சார மேனேஜராக பொறுப்பேற்றார். ரோஹ் ஜனாதிபதியானதும் அவருடைய நிர்வாகத்தில் செயலாளராகவும், நெருங்கிய உதவியாளராகவும் பல பொறுப்புகளை கவனித்தார். கடைசியாக ஜனாதிபதியின் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.

 

இரண்டாவது முறையாக வடகொரியாவுடன் அமைதிப் பேச்சு நடபெற்றபோது, அதை ஏற்பாடு செய்தவர், அதற்காக உழைத்தவர் மூன் ஜாயே-இன்.

 

எனவேதான், பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். தென்கொரியா ஜனாதிபதி ஆகிறவர்கள் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், வடகொரியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ள விரும்பமாட்டார்கள்.

 

அந்த வகையில் மூன் ஜாயேவும் வடகொரியாவுடன் இணக்கமான இணைப்பு முயற்சியை தொடரவே விரும்பினார். இவர் ஜனாதிபதி ஆன சமயத்தில் வடகொரியா ஜனாதிபதியாக கிம் ஜோங்-உன் பொறுப்பேற்றுவிட்டார்.

 

koreavin kathai


 

தனது தாத்தா கிம் இல் சுங், அப்பா கிம் ஜோங்-இல் ஆகியோரைத் தொடர்ந்து ஜனாதிபதியான கிம் ஜோங்-உன் வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டம்  விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தினார். இது ஜப்பானையும், அமெரிக்காவையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

 

வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக கண்டித்தார். வடகொரியாவுக்கு வரம்பு மீறிய எச்சரிக்கைகளை விடுத்தார். அந்தச் சமயத்தில்தான், கொரியா தீபகற்பம் அணு ஆயுத அச்சுறுத்தலற்ற பகுதியாக மாற அமைதி முயற்சியை தொடங்க விரும்புவதாக தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜாயே-இன் அறிவித்தார்.

 

அவருடைய அறிவிப்பை உடனடியாக வரவேற்றார் கிம் ஜோங்-உன். இரண்டு கொரியா ஜனாதிபதிகளின் இந்த இணக்கமான அறிவிப்புகள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அதிரவைத்தது. அவர் சமநிலைக்கு வருவதற்குமுன் அமெரிக்காவுடனும் பேசத் தயார் என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டு ட்ரம்ப்பை சிக்கலான சூழலில் தள்ளிவிட்டார்.

 

அடுத்தடுத்து நடந்த வரலாற்று நிகழ்வுகளை இறுதியாகப் பார்ப்போம். அதற்குமுன் வடகொரியா வரலாற்றை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

 

(இன்னும் வரும்)

 

முந்தைய பகுதி:


தென்கொரியாவில் பதவி பறிக்கப்பட்ட முதல் பெண் ஜனாதிபதி!!! கொரியாவின் கதை #21
 

 

அடுத்தபகுதி:


வடகொரியாவின் கதை!! கொரியாவின் கதை #23

 

 

 

 

சார்ந்த செய்திகள்