மகனை புரிந்துகொள்ளாத அப்பாவுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
ஒரு பேமிலி கவுன்சிலிங்கிற்காக வந்தனர். 29 வயதான பையன் அப்பாவை புரிந்துகொள்ள மாட்டிக்கிறான், அடிக்கடி கோபப்படுகிறான். 29 வயது ஆகியும் வாழ்க்கையில் இன்னும் செட்டில் ஆகவில்லை. இப்போது பையன் தங்களை பிரிந்து வெளியே செல்லும் சூழ்நிலையில் இருப்பதாக அம்மா சொன்னார். அப்பா, தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறி அவர் அமைதியாக இருந்தார். பையன் மாடலிங் வேலையை, சமீபத்தில் தொடங்கியிருப்பதால் அதில் இருந்து அதிகளவு பணம் வராமல் இருக்கிறது. இதனால், அப்பாவிடம் இருந்து பையன் பணம் வாங்குகிறான். மகன் வேலை செய்யும் அந்த தொழில் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.
குறைவாக சம்பளம் வாங்கி செட்டில் ஆகாததால், தன்னை பற்றி வீட்டில் வருவோரிடம் விமர்சனம் செய்து பேசுகிறார்கள். தன்னை எப்போதும், அப்பா திட்டிக்கொண்டே தான் இருக்கிறார். தன்னை புரிந்துகொள்ள மாட்டிக்கிறார். செட்டில் ஆவதற்கு இன்னும் சில டைம் ஆகும். அதனால், அப்பாவிடம் இருந்து வாங்கிய பணத்தை கூட கொஞ்ச கொஞ்சமாக திருப்பி கொடுத்துவிடுவேன். ஆனால், தன்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டிக்கிறார்கள். வீட்டில் இருக்கவே பிடிக்காமல் வெளியே போக தோன்றுகிறது என்று பையன் சொல்கிறான். அப்போது, தாராளமாக வீட்டை விட்டு வெளியே போ என அப்பா சொன்னார்.
அப்பா, ஒரு ஓய்வு பெற்ற ஊழியர். இருப்பினும், அவர் தற்போது ஒரு வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரோட கோபம் நியாயமானது தான். 29 வயதில் ஒரு பையன் தன்னுடைய பணத்தை வாங்கி செலவழிக்கிறான் என்பது அவரது கோபமாக இருந்தது. அவர் பேச தொடங்கியதில் இருந்து 3 மணி நேரத்திற்கு எங்கள் யாரையும் பேச விடவில்லை. பையன், ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்து தற்போது வரை என்ன என்ன தவறு செய்தான் என்று பட்டியலிட்டு சொல்கிறார். இதற்கு பையனும் பதிலளிக்க என்னை யாரும் பேசவிடவில்லை. அப்போது தான், அந்த குடும்பத்தின் சூழலே சரியில்லை என்பது எனக்கு தெரிந்தது. யாருமே, அந்த குடும்பத்தில் யாரும் சமரசம் செய்ய தயாராக இல்லை, தன் தவறை உணர்ந்துகொள்ளவும் யாரும் தயாராக இல்லை, சண்டையையும் நிறுத்தவும் தயாராக இல்லை. அப்பா, அவரது மனைவியிடமே அடிக்கடி இப்படிதான் சண்டை போட்டிருக்கிறார். டைவர்ஸ் வரைக்கும் சென்று அந்த ரிலேஷன்ஷிப் சரியாகி வந்த சூழ்நிலையில் தான் அந்த பையன் வளர்ந்திருக்கிறார். அப்பாவின் எதிரொலியாக தான் அந்த பையன் தெரிகிறான். இதனால் தான் கோபமும் அதிகமாக வருகிறது. கோபத்தை கட்டுப்படுத்த தெரபி, எல்லாம் பார்த்த பின்னால் கூட அவனால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்கள் மூவரையும் அமைதி படுத்திவிட்டு, அப்பாவிடம் பேசத் தொடங்கினேன். தவறு செய்யாதவர்கள் இங்கு யாரும் கிடையாது. முடிந்தது முடிந்தது தான், இப்போது அதை திருப்பி பேசுவதால் என்ன ஆகப் போகிறது?.எனச் சொன்னேன். ஆனால், அவர் ஒப்புக்கொள்ளாமல் பையனை பற்றியே குறை கூறுகிறார். கடைசியில், இனிமேல் உங்களிடம் இருந்து எந்தவித பணத்தை வாங்க மாட்டேன். ஆனால், தன்னை புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் முன்பு தன்னை பற்றி குறை கூறாதீர்கள் என்று பையன் சொன்னான். ஆனால், அப்பா சமரசம் ஆகாமல், பையன் கடந்த கால வாழ்க்கையில் செய்த தவறுகளை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். இந்த கவுன்சிலிங் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.