Skip to main content

"அண்ணன் ஜெயிச்சி வரும்போது நானும் குடும்பத்தோடு வர்றேம்மா" வைகோ வீட்டில் விஜயகாந்த்! - கடந்த கால தேர்தல் கதைகள் #6 

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் அவர் கலந்துகொண்டாலும் தொண்டர்களிடம் நேரடியாகப் பேசக்கூடிய நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கலந்துகொள்வார் என்று அவ்வப்போது கூறப்பட்டது. அவரே ஒரு பேட்டியில் மருத்துவர் அறிவுரைப்படி பிரச்சாரத்தில் கலந்துகொள்வேன் என்று கூறினார். ஆனாலும், ஆரம்ப கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் எதுவும் கலந்துகொள்ளவில்லை. நாளை பிரச்சாரம் முடியவிருக்கும் நிலையில் இன்று சென்னையில் விஜயகாந்த் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார் என்று நேற்று ஒரு அறிவிப்பு வந்தது. வடசென்னையில் விஜயகாந்த்தின் குரலைக் கேட்க தொண்டர்கள் ஆர்வத்துடன் கூடினார்கள்.

 

vaiko with vijayakanth



கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமைத்த கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இருந்தன. அதில் மதிமுக - தேமுதிக இரண்டு கட்சித் தலைவர்களிடையே நல்ல உறவும் நெருக்கமும் இருந்தது. பாமக - தேமுதிக இரண்டு கட்சிகளும் சற்று விலகியே நின்றிருந்தன. தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்கு பின்பும் அவர்களிடையே நல்லுறவு இல்லை. இப்பொழுது மதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிக்கு சென்றுவிட்டது. தேமுதிகவும் பாமகவும் பாஜகவுடன் அதிமுக தலைமை என்று சொல்லப்படும் கூட்டணியில் இருக்கின்றன. இப்பொழுது முழு வீச்சில் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த், கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுழன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக தலைவர் வைகோ வீட்டிற்கும் சென்றார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது விஜயகாந்த் தன் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் இருந்தபோது அவரை போனில் தொடர்புகொண்ட வைகோ, "கேப்டன்.. நான் இப்ப கலிங்கப்பட்டி வீட்டிலே இருக்கேன். எங்கம்மா உங்ககிட்டே பேசணும்னு சொன்னாங்க கேப்டன்" என்று சொல்ல, விஜயகாந்த்தும் ஆர்வத்தோடு, "அம்மாகிட்டேயா.. கொடுங்கண்ணே"ன்னு சொல்லியிருக்கிறார். விஜயகாந்த்கிட்டே போனில் பேசிய வைகோவின் அம்மா மாரியம்மா, "தம்பீ உங்களை போட்டோவுல பார்த்திருக்கேன், டி.வி.யில பார்த்திருக்கேன். உங்களைப் பத்தி, உங்க பூர்வீகம் பத்தியெல்லாம் புள்ள சொல்லுச்சு. இங்கதான் உங்கம்மா பொறந்த ஊராமே, நீங்களும் எனக்குப் புள்ளதான். இங்கே பிரச்சாரத்துக்கு வரும்போது எங்க வீட்டுக்கு வாங்க. எனக்கு வயசாயிடிச்சி. என்னால அங்க வந்து உங்களைப் பார்க்க முடியாது. உங்களை நேரிலே பார்க்க ஆசையா இருக்குது தம்பி"ன்னு அன்போடு சொல்ல, விஜயகாந்த்தும் நெகிழ்ந்து போய், "என் அம்மாவைப்போலத்தான் நீங்களும். உங்க வீட்டுக்கு வந்து கண்டிப்பா பாக்குறேன். அது உங்க வீடல்ல. நம்ம வீடு.. வந்து சாப்பிடுறேம்மா" என்று சொன்னாராம்.

 

vijayakanth at vaiko's house



பின்னர் தென்தமிழகத்தில் தனது பிரச்சாரப் பயணத்தின் போது, வைகோ வீட்டிற்குச் சென்றார் விஜயகாந்த். கலிங்கப்பட்டி வீட்டில் வைகோ அம்மாவும் உறவினர்களும் இருந்திருக்கிறார்கள். எல்லோரையும் விஜயகாந்த்துக்கு வைகோ அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். வீட்டில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனோடு வைகோ இருந்த படத்தை விஜயகாந்த் ஆச்சரியமாகப் பார்க்க, தோணியிலே ஈழத்துக்குப் போனப்ப உதவியவரை விஜயகாந்த்திடம் வைகோ அறிமுகப்படுத்தினார். பின்னர்  அவரை சாப்பிட அழைத்தார் வைகோ. தோசை, வடை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று டிபன் பரிமாறப்பட, ருசித்து சாப்பிட்ட விஜயகாந்த்துக்கு அல்வாவும் பரிமாறப்பட்டது.

விருந்துக்குப் பிறகு வீட்டில் உள்ள அறையில் இரண்டு பேரும் 15 நிமிடம் பேசியிருக்கிறார்கள். பேசியது சம்பந்தமாக இரண்டு பேருமே தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, தே.மு.தி.க நின்ற தொகுதிகளில் பா.ம.ககாரர்கள் சரியாக  ஒத்துழைப்பு தருவதில்லையென்று விஜயகாந்த் சொன்னதோடு, 'சேலத்தில் சுதீஷை நிற்கச் சொன்னதே அன்புமணிதான். ஆனா சேலத்துல உள்ள பா.ம.க.காரங்க எங்களோட ஒட்டாம இருக்காங்க' என்று வருத்தத்தோடு விஜயகாந்த் சொல்ல, அவரை சமாதானப்படுத்திய வைகோ, "விடுங்க கேப்டன், அடுத்த சட்டமன்றத் தேர்தலை நாமதான் நிர்ணயிக்கப்போறோம். நாம இனி இணைந்தே இருப்போம்" என்று சொல்லியிருக்கிறார். கலிங்கப்பட்டி வீட்டிலிருந்து விஜயகாந்த் புறப்படும்போது வைகோ அம்மாவிடம், "அண்ணன் வைகோ ஜெயிச்சி மத்திய மந்திரியா இங்கே வரும்போது நானும் குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வர்றேம்மா" என்று  சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்து போட்டியிட்டது.  இப்படியிருந்த இரு கட்சிகளும் தலைவர்களும் இன்று எதிரெதிர் முகாம்களில் இருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை, இப்போதிருக்கும் நிலையும் நிரந்தரமில்லை.