இன்றைய அரசியல் சூழ்நிலையில் நிறைய புது முகங்களும், புதிய அரசியல் கட்சிகளும் , எதிர்பார்க்காத கூட்டணிகளும் வாரிசு வேட்பாளர்களும் என பல சுவாரசியங்களுடன் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியோ அல்லது ஒரு அரசியல்வாதியோ கொஞ்சம் கூடுதலாக கவனம் ஈர்ப்பார். இந்தத் தேர்தல் காலத்தில் கூட்டணிகள் அமையும் முன்பு வரை திடீர் ஹீரோவானது தேமுதிக. கடந்த தேர்தலைப் போலவே பல திசைகளிலும் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக இறுதிமுடிவெடுத்தது. அந்த முடிவெடுக்கப்படும் வரை தேமுதிகவும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் செய்தியாக இருந்தனர். பின்னர் காட்சி மாறியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி. இப்படி சென்று கொண்டு இருக்கும் போது கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் செய்தியானவர்களையும் செய்திகளையும் குறித்து பார்ப்போம்.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் நடந்தது அழகிரிக்கும் திமுகவுக்குமான மோதல் கதை. எதையோ பிடிக்கப்போய் எதுவோ ஆன கதையாகிவிட்டது அழகிரி விவகாரம். ஒரு நாள் காலை நேரத்தில் கோபாலபுரம் வீட்டில் கலைஞரை நோக்கி அதிரடியாகப் பேசிய அழகிரி, தன் பேச்சில் மு.க.ஸ்டாலினின் உயிர் குறித்தெல்லாம் பேச, கடந்த 2014 ஜனவரி 24-ந் தேதி அழகிரியைத் தற்காலிக நீக்கம் செய்தது தி.மு.க தலைமை. 2014 ஜனவரி 30ந் தேதி அழகிரியின் பிறந்தநாள் என்பதால், இந்த சஸ்பென்ஷன்தான் அவருக்கு கலைஞர் அளித்த அதிர்ச்சிப் பிறந்தநாள் பரிசு. அதன்பின், தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் அதிர்ச்சிப் பரிசுகளை அளிப்பதற்காகக் காய் நகர்த்தினார் அழகிரி.
மீடியாக்களிடம் அதிரடி பேட்டிகள், ஆதரவாளர்களுடன் ஆலோசனைகள், டெல்லி விசிட், அங்கே பிரதமர் மற்றும் பா.ஜ.க தலைவருடனான சந்திப்புகள், கட்சியின் மேலிடத்திற்கு எரிச்சலூட்டும் வகையிலான விதவிதமான போஸ்டர்கள், தனிக்கட்சி தொடக்கம் பற்றிய முன்னோட் டங்கள் என அழகிரியும் அவரது ஆதர வாளர்கள் தரப்பும் விறுவிறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அழகிரியின் மூவ்களைப் பார்த்த அவருக்கு வேண்டிய சிலரே, ஓவராகத்தான் போய்க்கொண்டிருக்கிறார் என்றனர். ஆனாலும், ஓவர் ஸ்பீடை அழகிரி நிறுத்தவில்லை.
2014 மார்ச் 23-ந் தேதியன்று காலையில் அழகிரி வீட்டுக்கு வைகோ வந்தார். அப்போது பாஜக கூட்டணியில் இருந்தது மதிமுக. தேர்தல் களத்தில் ஆதரவளிப்பது தொடர்பாக அழகிரி எந்த உத்தரவாதமும் வைகோவுக்குத் தரவில்லை என்றாலும், இப்படியெல்லாம் செய்தால்தான் கலைஞர் இறங்கிவந்து, தன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்வார் என்பது அழகிரியின் கணக்கு. ஆனால் கலைஞரின் கணக்கு நேர் எதிராக அமைந்துவிட்டது. வைகோவைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா போன்றவர்களும் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டுவந்த நிலையில், தி.மு.கவிலிருந்து அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் கலைஞர்.
வழக்கம்போல சென்னையிலிருந்து அழகிரிக்கு முன்கூட்டியே தகவல் சென்றுவிட, அவர் அதிர்ச்சியும் அப்செட்டும் ஆகிவிட்டார். 2014 மார்ச் 25 அன்று ஆதரவு கேட்டு ராமநாதபுரம் பா.ஜ.க வேட்பாளர் வருவதாக அவரிடம் சொல்லப்பட, 'இப்ப சந்திக்க முடியாது' என்று சொல்லிவிட்டு 'இப்படி ஆயிடிச்சேய்யா...' என்றபடி டி.வி.யை ஆன் பண்ணியிருக்கிறார். அழகிரியை தி.மு.கவிலிருந்து நிரந்தரமாக நீக்கியிருப்பது பற்றி கலைஞர் அறிவித்துக் கொண்டிருந்தார். அழகிரியின் கண்கள் கலங்கியிருந்தன.
சென்னையிலிருந்து மகன் துரைதயாநிதி தொடர்புகொள்ள, அழகிரி மனது உடைந்து அழுதிருக்கிறார். அழகிரியைப் பொறுத்தவரை தனக்காக யாராவது தலைமையிடம் பேசி சரிசெய்ய வேண்டும் என்பதே எதிர் பார்ப்பு. தானாகப் பேசுவதற்கு ஈகோ தடுத்துக்கொண்டிருந்தது. கண்களில் எரிச்சல் இருந்ததால் மருந்து விட்டுக்கொண்டு படுத்திருந்தவருக்கு ரஜினியிடமிருந்து போன். ஆறுதலாகப் பேசிய ரஜினியின் வார்த்தைகள் அழகிரியின் மனதுக்கு மருந்து தடவியது.
அன்று மாலை மீடியாவை சந்தித்தவர், தன் மீதான நடவடிக்கையை கலைஞர் விருப்பப்பட்டு எடுக்கவில்லை என்றும் தனக்கு எதிராக செயல்படுபவர்களும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கலைஞரை நிர்பந்தப்படுத்தி, எடுக்க வைத்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அவர் சூசகமாகக் குறிப்பிட்டது ஸ்டாலினையும் அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரத்தையும்தான். இன்னமும்தான் தி.மு.கதான் என்ற அழகிரி, தன்னிடம் விளக்கம் கேட்டு தலைமை எந்த நோட்டீசும் அனுப்பவில்லை என்றும் அப்படி எதுவும் தனக்கு வரவில்லை என்றும் சொன்னார். நீக்கும் நடவடிக்கை எடுத்த பொதுச் செயலாளர் பேராசிரியர் மீது வழக்குப் போடப்போவதாகவும் அழகிரி தெரிவித்தார்.
தனிக்கட்சி தொடங்குவீர்களா என்ற கேள்விக்கு அவசரமாக மறுப்பு தெரிவித்த அழகிரி, அவரது வீட்டுக்கு வைகோ வந்தது பற்றி கேட்கப்பட்டபோது, "தானாக வருபவரை வேண்டாம்னா சொல்ல முடியும்? பொடாவில் இருந்த வைகோவை கலைஞர் சந்திக்கலையா?' எனத் திருப்பிக் கேட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை, தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி மீடியாக்கள் திரும்பத் திரும்பக் கேட்க... "ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்றார் அழகிரி.
இன்னொரு புறம் அழகிரி ஆதரவாளர்களை ஸ்டாலின் பக்கம் இழுக்கும் படலம் தொடங்கியிருந்தது. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட கட்சிக்காரர்களிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் கையெழுத்துப் போடச் சொல்லியிருக்கிறார் அழகிரி. அதில் எழுதியிருந்ததை அவர்கள் படிக்க முயன்றபோது, "என்னய்யா நான் செஞ்சிடப்போறேன். கையெழுத்துப் போடமாட்டியா" என உரிமையாகக் கேட்டுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ளவர்கள் ராஜினாமா செய்வதாக எழுதப்பட்ட கடிதம் அது. ஆனால், மதுரை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க நிர்வாகிகள், ஸ்டாலினின் வேட்பாளரான வேலுச்சாமிக்காகக் களமிறங்கி வேலை செய்தார்கள்.
அந்த சமயத்தில் கலைஞர் தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னையில் தொடங்கிய போது கோபாலபுரம் வீட்டுக்கு வந்து தயாளு அம்மாவை சந்தித்தார் அழகிரி. கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி உருக்கமாகப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு பற்றிய தகவலை அறிந்த கலைஞர், தனது பிரச்சாரத்திலேயே, ""துரோகத்தை தி.மு.க. ஒரு போதும் மன்னிக்காது. எனக்கு குடும்பம், குட்டிகளைவிட கொள்கைதான் முக்கியம்'' என்றார். மறுநாள் சி.ஐ.டி. காலனியில் கனிமொழியை சந்தித்தார் அழகிரி. தனக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுவதாகவும் ஆனால் தன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அழகிரி குமுற... ""என்ன இருந்தாலும் அப்பாவுடன் பேசித்தான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். கட்சிக்கு சங்கடம் ஏற்படும்படி மீடியாக்களிடம் பேசியிருக்கக்கூடாதுங்கண்ணே'' என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். இருப்பினும், தன் மனதில் உள்ள கோபங்களைக் கொட்டியுள்ளார் அழகிரி.
ராஜ்யசபா எம்.பி கே.பி.ராமலிங்கம்தான் அழகிரியின் அந்த மூவ்மென்ட்டுகளுக்குப் பின்புலமாக இருந்தவர். டிஸ்மிஸ் நடவடிக்கைக்குப் பிறகு அழகிரியைத் தொடர்புகொண்ட கே.பி.ராமலிங்கம், "என்கிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினாரு. தென்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் நீங்க ஆளுங்கட்சிக்கு ஆதரவா வேலை பார்க்கணும், ஜெயிக்க வைக்கணும்னு சி.எம். விரும்புறாங்களாம். உங்க முடிவைத் தெரிஞ்சுக்க சொன்னார்'' என சொல்லியுள்ளார். கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்று சொல்லியிருக்கிறார் அழகிரி. ராமலிங்கம் மூலம் அழகிரியை இழுக்கும் முயற்சியை பண்ருட்டியார் தொடர்ந்தபடியே இருக்க, தென்சென்னை அ.தி. மு.க எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரனும் ஒரு நண்பர் மூலம் அழகிரிக்கு தூது அனுப்பியிருக்கிறார்.
தி.மு.க. தலைமையிலிருந்து தன்னை அழைத்து சமாதானப்படுத்த வேண்டும் என்பதுதான் அழகிரியின் அப்போதைய எதிர்பார்ப்பு. ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் மெல்ல விலகிச் சென்று கொண்டே இருந்தனர். கடைசி வரை யாரும் அவரை அழைக்கவில்லை. கலைஞரும் உடல்நலம் குறைந்து பின் இயற்கை எய்தினார். திமுக முழுவதும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்தது. ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். சென்னை விமான நிலையத்தில் திமுகவை தாக்கி அவ்வப்போது பேட்டி கொடுத்தார் அழகிரி. இப்போது திமுகவிடம் இருந்து வெகுதொலைவில் இருக்கிறார். திமுகவில் இருந்து மட்டுமல்ல கிட்டத்தட்ட அரசியலில் இருந்தும்தான். யாரும் அவரை சந்திக்கவில்லை, ஆதரவு கேட்கவில்லை. மதுரை திமுக கூட்டணி வேட்பாளர் அவரை சந்திப்பேன் என்று கூறினார், பார்ப்போம்.
கடந்த தேர்தல் காலகட்டத்தில் நடந்தது இந்தக் கதை. அடுத்த தேர்தல் காலகட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை.
அடுத்த பகுதி:
"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு..." - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2