Skip to main content

வாழ்க வளமுடன் என்பது பிழையா ? சொல்லேர் உழவு - பகுதி 30

Published on 11/01/2019 | Edited on 24/01/2019

 

 

ss

 

பேச்சு வழக்கினை நன்றாக ஊன்றிக் கவனிப்பது என் தலையாய பொழுதுபோக்கு. மொழி நுட்பங்கள் மக்கள் நாவினில் தொடர்ந்து வாழ்கின்ற தன்மையால்தான் தமிழ் வாழ்கிறது. அதனைப் பொய்ப்பிக்கும் எவ்வொரு சான்றினையும் நான் இதுகாறும் காணவில்லை. 


 

“காலைல சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் ?” என்று தாய்மார்கள் தம் பிள்ளைகளைக் கடிந்து கொள்கிறார்கள். “என்னத்துக்கு ஆகும் ?” என்ற தொடர் என்னை ஈர்த்தது. “எதற்கு ஆகும் ?” என்று வினவாமல் “என்னத்துக்கு ஆகும் ?” என்கிறார்கள்.


 

 

என்ன என்பது வினாச்சொல். அவ்வினாச்சொல் தனித்து நிற்பது. ஆனால், அவ்வினாச்சொல்லோடு கு என்னும் நான்காம் வேற்றுமை உருபினைச் சேர்க்க முயல்கிறார்கள். ஆழ்மனத்தில் பதிந்துவிட்ட மொழியியற்கையானது பேச்சுத்தமிழில் இவ்வாறு  வெளிப்படும்.

 

 

என்ன + கு என்று சேர்க்கும்போது “என்னக்கு” என்று சேர்க்க முடிவதில்லை. இடையில் ‘அத்துச் சாரியை’யையும் போடுகிறார்கள். “என்ன அத்து கு” என்பதனைத்தான் “என்னத்துக்கு” என்கிறார்கள். அடேங்கப்பா… மிகவும் எளிமையான பேச்சுச்சொல் ஒன்றில் எவ்வளவு ஆழ்ந்த மொழித்தன்மை பொதிந்திருக்கிறது, பாருங்கள் !

 

 

இலக்கணத்தில் சாரியை என்பது உண்டு. ஒரு சொல்லின் பகுதியையும் விகுதியையும் இணைக்கத் தோன்றுவது அது. ம் என்ற மெய்யெழுத்தில் முடியும் பெயர்ச்சொல் வேற்றுமை உருபினை ஏற்க வேண்டுமென்றால் அப்பெயருக்கும் வேற்றுமை உருபுக்கும் இடையில் ஒரு சாரியை தோன்றும்.

 

 

அத்து என்பது சாரியைகளில் புகழ்பெற்றது. மரம் என்ற பெயரோடு ஐ என்ற வேற்றுமை உருபினைச் சேர்க்க வேண்டுமென்றால் இடையில் அத்துச் சாரியை தோன்ற வேண்டும்.

 

 

மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை என்று வரும்.
 

 

மரம் + ஐ = மரமை என்று நாம் எழுதுவதில்லை. பேச்சிலும் அவ்வாறு கூறுவதில்லை.
 

 

மரத்தை, மரத்தால், மரத்துக்கு. மரத்தின், மரத்தினது, மரத்தின்கண் என்று அத்துச் சாரியை தோன்ற வேண்டும். அப்போதுதான் ம் என்ற மெய்யில் முடியும் பெயர்ச்சொல் வேற்றுமை உருபினை ஏற்கும்.

 

 

மேற்சொன்ன இயல்பின் காரணமாகத்தான் “வாழ்க வளமுடன்” என்னும் புகழ்பெற்ற வாழ்த்துத் தொடரில் பிழையிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

 

 

வளம் என்பது ம் என்ற மெய்யில் முடியும் மகர மெய்யீற்றுப் பெயர்ச்சொல். உடன் என்பது சேர்க்கைப் பொருள் தோன்றுமிடத்தில் வருகின்ற மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. வளம் என்ற சொல் உடன் என்ற சொல்லுருபை ஏற்க வேண்டுமெனில் இடையே அத்துச் சாரியை தோன்ற வேண்டும். வளமுடன் என்பது பிழை, வளத்துடன் என்பதே சரியென்பர். வாழ்க வளத்துடன் என்றிருக்க வேண்டும் என்பது ஒரு தரப்பினரின் வழக்கு.

 

 

அவர்கள் கூறுவதில் உண்மை இல்லாமலில்லை. அதனை மறுப்பவர்கள் “அத்துச் சாரியை என்பது பிற்கால வழக்கு… தொல்காப்பியக் காலத்தில் அத்துச் சாரியைத் தோற்றம் அரிது”  என்கின்றனர். மரத்துக்கு என்பதனை மரக்கு என்று கூறும் வழக்கம் இருந்தது என்று நிறுவவும் முனைகின்றனர். அத்துச் சாரியை தோன்றாமல் ஒரு வேற்றுமை உருபு தோன்றினால் அதனை இடைக்குறை விகாரமாகவும் கொள்ளலாம் என்பது அவர்கள் தரப்பு. வாழ்க வளத்துடன் என்பதே இலக்கணப்படி சரியாகும் என்பது தமிழறிஞர் பலரின் முடிவு.  

 

 

அத்துச் சாரியையானது உருபேற்கும்போது மட்டுமில்லாமல் சொற்சேர்க்கையின்போதும் தெளிவாகவும் வலிமையாகவும் தோன்றுவதை நாம் மறுக்க இயலாது. அடிமரத்து வேர்கள், ஒருமரத்துப் பறவைகள், குளத்து மீன்கள், தோட்டத்துக் காய்கள் போன்ற தொடர்கள் அதற்குச் சான்றாகும்.

 

 

அத்துச் சாரியையானது ஒரு சொல்லினை வேறுபடுத்திக் காட்டுவதோடு, அச்சொல் உருபுகளுடனோ பிற சொற்களுடனோ சேர்கையில் உரிய அழுத்தத்தோடும் இசையோடும் ஒலிப்பதற்கு உதவுகிறது. அதனால்தான் பேச்சுத் தமிழில் தனித்துத் தோன்றும் இயல்பாகவும் மாறிவிட்டது. என்ன என்பது அத்துச் சாரியை பெறும் என்பதற்கு இலக்கணம் துணை வாராது. ஆனால், பேச்சுத் தமிழியற்கைக்கு அத்துச் சாரியை தேவைப்படுகிறது.

 

 

“அவன் கிடக்கறான்… ஒன்னத்துக்கும் உதவமாட்டான்…” என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். “ஒன்னத்துக்கும்” என்ற சொல்லைப் பாருங்கள். அச்சொல் “ஒன்றுக்கும்” என்பதன் பேச்சு வழக்கு. “ஒன்றுக்கும் உதவமாட்டான்” என்பதனை “ஒன்னத்துக்கும் உதவமாட்டான்” என்று பேச்சில் வழங்குவது எப்படி ? ஒன்று என்பதன் பேச்சு வடிவம் ‘ஒன்னு’ என்பது. அது கு என்ற வேற்றுமை உருபினை ஏற்கையில் இடையில் தானாக அத்துச் சாரியை தோன்றுகிறது. ஒன்னு + அத்து + கு = ஒன்னத்துக்கு என்று ஆகிறது.

 

 

ஒன்றுக்கு மட்டுமில்லை, இரண்டுக்கும் பேச்சு வழக்கில் அத்துச் சாரியை தோன்றுவதைக் காணலாம். “இரண்டுத்துக்கும் வெச்சுக்கலாம்…” என்று பேசுவதைக் கேட்டிருக்கிறோம்.

 

 

அத்துச் சாரியையானது அத்துணை வலிமைமிக்கது. எழுத்திலும் பேச்சிலும் சொற்களுக்கிடையே ஓர் உயவுத்தன்மையை ஏற்படுத்தி மொழியைக் காக்கிறது.    

 

 

 

முந்தைய பகுதி:


கர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29

 

அடுத்த பகுதி:

 

வழுவழுப்பா, வழவழப்பா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 31