2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2024 முதல் 2031 வரை நடைபெறவுள்ள ஐசிசி தொடர்களை எந்தெந்த நாடுகள் நடத்தவுள்ளன என்ற பட்டியலை அண்மையில் வெளியிட்டது.
அதன்படி, 2024 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3 ஐசிசி தொடர்களை நடத்தவுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையை இலங்கையுடன் சேர்ந்தும், 2031 ஒருநாள் உலகக் கோப்பையை வங்கதேசத்துடன் இணைந்தும் இந்தியா நடத்தவுள்ளது. அதேபோல் 2029 சாம்பியன்ஸ் ட்ராஃபியையும் இந்தியா நடத்தவுள்ளது.
அதேநேரத்தில் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமான கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு அனுமதி தருவதைப் பொறுத்தே இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்வது குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம், 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபிக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், நேரம் வரும்போது இதுகுறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "இதுபோன்ற உலகளாவிய போட்டிகள் நடக்கும்போது பல காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களில் கூட, அங்கு (பாகிஸ்தான்) சென்று விளையாடுவதிலிருந்து பல நாடுகள் விலகியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் அங்கு நிலைமை சாதாரணமாக இல்லை. கடந்த காலங்களில் அணிகள் தாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு என்பது அங்குள்ள முக்கிய சவாலாக உள்ளது. அது ஒரு கவலைக்குரிய விஷயமாகும். எனவே நேரம் வரும்போது, சூழ்நிலையைப் பொறுத்து அரசாங்கம் முடிவெடுக்கும். முடிவெடுப்பதில் உள்துறை அமைச்சகமும் பங்கேற்கும்" என கூறியுள்ளார்.