அண்மையில் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன் வெல்த் போட்டியில் வென்ற இரண்டாவது தங்கப்பதக்கம் இது. இந்த நிலையில் சஞ்சிதா சானுவிற்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினார் என்றும் இதனால் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் சர்வதேச பளுதூக்கும் சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இப்படி ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு நேற்று அளித்த பேட்டியில் '' நான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் எதையும் பயன்படுத்தவில்லை. என்னை இடை நீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்கும் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன் என்று தெரிவித்தார்.
இந்த சர்ச்சை குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் சக்தேவ் யாதவ் கருத்து தெரிவிக்கையில் '' ஊக்க மருந்து சோதனை முடிவுகளை அறிவிக்க ஏன்? நீண்ட காலம் பிடிக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மருத்துவ சோதனைக்கு பிறகு சானு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டார், அதற்கு பின்னர் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியிலும் கலந்துகொண்டு தங்கம் வென்றார். ஏன் இதுபோல் நடக்கிறது என்பதை எதிர்த்து போராடுவோம் என்று கூறினார்.
அதுபோல் சானு மீதான ஊக்க மருந்து சோதனையில் ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால் நான்காண்டு வரை தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தெரியப்படுகிறது.
2008-ஆம் ஆண்டு முதல் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தால் நடந்தபட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய 13-வது இந்தியர் சஞ்சிதா சானு என்பது குறிப்பிடத்தக்கது.