மும்பை வான்கடே மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 2-வது குவாலிபயர் போட்டியில் 2014-ஆம் ஆண்டு மோதின. சேவாக்கின் அதிரடியால் 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்திருந்தது பஞ்சாப். ஜான்சன் பவுலிங்கில் டூ ப்ளசிஸ் வெளியேற, சின்ன தல ரெய்னா களமிறங்கினார். ஜான்சன், சந்தீப் சர்மாவின் மிரட்டல் பவுலிங்கில் அதிரடி மன்னன் டுவைன் ஸ்மித் தடுமாறிக் கொண்டிருந்தார். மறுபுறம் இறங்கிய ரெய்னா சந்தித்த பந்துகளை எல்லாம் பவுண்டரியும், சிக்ஸருமாக எல்லைக்கோட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 100 ரன்களை விளாசியிருந்தது. ரெய்னா 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு முன்னர் வரை பவர் ப்ளே ஓவர்களில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரே 87 ரன்கள் தான். ஆனால் அந்த போட்டியில் பவர் ப்ளேவின்போது ரெய்னா மட்டுமே 87 ரன்கள் விளாசினார். இதுதான் ஐ.பி.எல். போட்டிகளில் ரெய்னாவின் பேட்டிங் ஸ்டைல்.
தனது அணி 10 ரன்களுக்கு 2 அல்லது 3 விக்கெட்களை இழந்து திணறும்போது களமிறங்கி, விக்கெட் விழாமல் பொறுமையான ரன் ரேட்டுடன் பேட்டிங் செய்பவர்கள் சிலருண்டு. அதே சூழ்நிலையில் அடித்து ஆடி ரன்கள் எடுத்து விக்கெட்களை பறிகொடுப்பவர்களும் உண்டு. ஆனால் ரெய்னாவை பொறுத்தவரை ஐ.பி.எல். போட்டிகளில் இந்த மாதிரி சூழ்நிலைகளில் நல்ல ரன் ரேட்டையும் மெயின்டைன் செய்து, தனது விக்கெட்டையும் பறிகொடுக்கமாட்டார். இந்த தனித்துவம்தான் மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து ரெய்னாவை சிறந்த பேட்ஸ்மேனாக ஐ.பி.எல். வெளிப்படுத்தியது.
உலகின் பிரபலமாக உள்ள சில கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக இருக்கும் சில ரசிகர்களை கூட காணமுடியும். ஆனால் டிராவிட், டி வில்லியர்ஸ், ரெய்னா போன்ற வீரர்களை வெறுக்கும் கிரிக்கெட் ரசிகர்களை பார்ப்பது மிகவும் அரிது. ரெய்னாவின் செய்கைகள், சிரிப்பு, தனித்துவமான ஆட்டம் மூலம் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்துள்ளார்.
அணி வீரர்கள் சோர்வடையும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வீரர், நல்ல பீல்டிங், சிறப்பான பந்து வீச்சு, விக்கெட், எதிரணி பேட்ஸ்மேனின் நல்ல இன்னிங்ஸ் என எதுவாக இருந்தாலும் மற்றவர்களை பாராட்டுவதில் முதல் ஆள், ஈகோ இல்லாமல் செயல்படும் வீரர், ஸ்பெஷல் ஷாட்ஸ், மாஸ் பீல்டிங், மனிதாபிமானம் உள்ளிட்டவை காரணமாக உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் ரெய்னா.
மிரட்டலான வேகப்பந்து வீச்சில் பெரும்பாலான சிறந்த பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அதிகம் அடிப்பார்கள். சிக்ஸர்கள் அடிக்க தயங்குவார்கள். ஆனால் ரெய்னாவை பொறுத்தவரை, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிறந்த வேகப்பந்து வீச்சில் சிக்ஸர்களை மிகவும் சாதாரணமாக விளாசுவார். ஐ.பி.எல். போட்டிகளில் இவருடைய பேட்டிங்க்கு இணை இவர் மட்டுமே.
ஐ.பி.எல்.-லில் இதுவரை 172 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரெய்னா, 448 பவுண்டரிகள், 185 சிக்ஸர்கள் உட்பட 4985 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 34, ஸ்ட்ரைக் ரேட் 138. 27 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 25 விக்கெட்களையும் எடுத்து பார்ட் டைம் பவுலராக அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். பீல்டிங்கில் 95 கேட்ச்கள் பிடித்து, ஒரு பீல்டராக ஐ.பி.எல்.லில் அதிக கேட்ச் பிடித்தவர் என்ற சாதனையையும் வைத்துள்ளார்.
ஐ.பி.எல்.-லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும் ரெய்னாவுக்கு உண்டு. நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல்.-தொடர்களிலும் 350 ரன்கள் எடுத்த ஒரே வீரர் ரெய்னா. இன்சைடு அவுட், கவர் டிரைவ் போன்ற ஷாட்கள் இவரது ஸ்பெஷல். சின்ன தல, மிஸ்டர் ஐபிஎல், குட்டி தல என்ற புனை பெயர்களுக்கு சொந்தக்காரர். சர்வதேச போட்டிகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், ஐ.பி.எல். இவருடைய கோட்டை என்றளவிற்கு சாதித்துள்ளார்.
இன்னும் 15 ரன்கள் எடுத்தால் 5000 ரன்கள் எடுத்தால் ஐ.பி.எல். டி20 போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். தனது ஆல்ரவுண்டர் செயல்பாடு மூலம் 4-வது முறை சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறார் ரெய்னா.