ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹெப்டாதலான் விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்திய வீரர்கள் தங்கம் வென்று வருகின்றனர். இதில், இரண்டு நாட்களாக நடைபெற்றுவந்த ஹெப்டாதலான் எனப்படும் ஏழு விளையாட்டுகளைக் கொண்ட பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை ஸ்வப்னா பர்மான் தங்கம் வென்றார். இதன்மூலம், ஹெப்டாதலான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
பல்லில் ஏற்பட்ட தொற்று வலியைக் கட்டுப்படுத்த, போட்டி முழுவதும் வலது கன்னத்தில் ப்ளாஸ்திரி ஒட்டிக்கொண்டு விளையாடினார் ஸ்வப்னா. தங்கம் வென்றபின் பேசிய அவர், “மற்றவர்களைப் போல ஐந்து விரல்கள் என இல்லாமல், இரண்டு கால்களிலும் தலா ஆறு விரல்கள் இருக்கின்றன. ஆனால், நான் ஐந்து விரல்களைக் கொண்டவர்கள் பயன்படுத்தும் ஷூக்களை அணிந்துகொண்டுதான் பயிற்சி மேற்கொள்கிறேன். இதனால், பல சமயங்களில் கால்களில் வலி ஏற்படுகிறது. எனவே, இதிலிருந்து விடுபட, என் கால்களுக்கு அடக்கமான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஷூக்களை வழங்கவேண்டும். அது எனது பயிற்சிக்கு கூடுதல் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.