இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கான அணி கட்டமைக்கப்பட்ட போது, அதில் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக பார்க்கப்பட்டவர் ருத்ர பிரதாப் சிங். 2007-ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக்கோப்பை வெல்வதற்குக் காரணமாக இருந்தவர்களுள் அவரும் ஒருவர். அந்தத் தொடரில் வெறும் 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், பலராலும் பாராட்டப்பட்டார்.
2011-ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் மிகச்சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆர்.பி.சிங், அதன்பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய அணியின் எதிர்கால வீரர்கள் என்ற பொதுவான பட்டியலில் இருந்தும் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், ஆர்.பி.சிங் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “13 வருடங்களுக்குப் பின்னர் இதே நாளில் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினேன். இந்தத் தருணத்தில் என் பயணத்தில் உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றியை சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இதை எழுதும்போது பல முரண்பட்ட கருத்துகள் என் மனதில் தோன்றுகின்றன. ஒருவர் தனது ஓய்வுமுடிவை அறிவிப்பை வெளியிடுவது சுலபமான விஷயம் கிடையாது. ஆனால், நமக்கு உள்ளிருந்து ஒரு குரல் அதை உணர்த்துமே.. எனக்கு அது நடந்துவிட்டது” என தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.