சர்வதேச பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், இங்கிலாந்து பர்மிங்காமி உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதில், இந்த ஆண்டு முதல்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. இதில், இந்திய பெண்கள் அணி பங்கேற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
20 ஓவர் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதின. இந்த இறுதி போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களுக்கு எட்டு விக்கெட்களை இழந்து 114 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக துவங்கப்பட்டது. பிறகு மழையின் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட 42 ரன்கள் இலக்கை இந்திய அணி எதிர்கொண்டது.
இதில் இந்திய அணி, 3.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய பெண்கள் அணிக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தங்கம் வென்ற பார்வை மாற்றுத்திறனாளி பெண்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள். நமது விளையாட்டு, பெண்களின் அசைக்க முடியாத மனப்பான்மையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் ஒரு மகத்தான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.