இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளும் நடந்து வருகின்றன. இந்தியாவில் கரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போது, இந்த ஐபிஎல் போட்டிகள் தேவையா, இல்லையா என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.
ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட், “இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது பொருத்தமற்றதா? அல்லது அவசியமான திசைத்திருப்பலா?” என கேள்வியெழுப்பியிருந்தார். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் ஓய்வெடுத்துக்கொள்ள இருக்கிறேன். எனது குடும்பத்தினர் கரோனாவிற்கெதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு துணை நிற்க விரும்புகிறேன். அனைத்து விஷயங்களும் சரியான திசையில் சென்றால், மீண்டும் விளையாட வருவேன் என நினைக்கிறேன். டெல்லி கேபிட்டல்ஸுக்கு நன்றி" என கூறியுள்ளார்.