நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் போட்டியில் 88 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனை ஒன்றை ராகுல் முறியடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே 20 மற்றும் 32 ரன்கள் எடுத்தனர். அதன்பின் வந்த கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய ராகுல் 88 ரன்கள் குவித்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 347 ரன்கள் எடுத்தது.
348 என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கிய நியூஸிலாந்து 48.1 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் 88 ரன்கள் குவித்ததன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். இதற்கு முன் தோனி 84 ரன்கள் அடித்திருந்ததே, நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தோனியின் இந்த சாதனையை ராகுல் தற்போது முறியடித்துள்ளார்.