4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் களமிறங்கிய நிலையில், டேவிட் மாலன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் பேர்ஸ்டோவ் 33 ரன்னில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஹாரி புரூக் 25 ரன்னிலும், மொயின் அலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேலும் பட்லர் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து லிவிங்ஸ்டோன் 20 ரன்னில் அவுட் ஆனார்.
அதே சமயம் நன்றாக விளையாடிய ரூட் 86 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 11 ரன்னிலும், சாம் கர்ரன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடில் ரஷித் 15 ரன்னுடனும், மார்க் வூட் 13 ரன்னுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 282 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய வில் யங், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா, தொடக்க வீரர் கான்வேயுடன் சேர்ந்தார். தொடக்க வீரராகக் களமிறங்கி ஆட்டமிழக்காமல் டெவான் கான்வே 131 பந்துகளில் 151 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர்.
இறுதியாக 36.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் சந்தித்த தோல்விக்கு நியூசிலாந்து அணி தற்போது பழி தீர்த்துள்ளது. அதே சமயம் 2023 உலகக் கோப்பையின் முதல் போட்டியை நியூசிலாந்து அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.