ஐ.பி.எல் தொடரில் நேற்று (19.04.2021) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 188 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
வெற்றிக்குப் பிறகு பேசிய தோனி, தனது ஃபிட்னெஸ் குறித்து பேசினார். அப்போது அவர், "24 வயதில் எப்படி ஆடுவேன் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கவில்லை. 40 வயதிலும் நான் எப்படி ஆடுவேன் என்ற உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியாது. ஆனால் குறைந்தபட்சம், மக்கள் இவருக்கு ஃபிட்னெஸ் இல்லை என என்னை நோக்கி கை காட்டாமல் இருந்தால், அது எனக்கு சிறந்து விஷயமாக இருக்கும்" என தெரிவித்தார்
இந்தநிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா, தோனி ஓய்வெடுத்துக்கொண்டு களமிறங்கலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில், “பேட்டிங்கில் தோனியிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. அவர் கையில் க்ளோவ்ஸ் இருக்கிறது. கேட்ச் பிடிக்க வேண்டும். ஸ்டம்பிங் செய்ய வேண்டும்தான். ஆனால் சி.எஸ்.கே பேட்டிங் ஆர்டர் நீளமானது. அதனால் தோனி கொஞ்சம் ஓய்வெடுக்கலாம். அவர் ஃபார்மில் இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். அவர் எவ்வளவு அதிரடியாக பேட் செய்வார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் தற்போது நிறைய சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் தோனி, அணியிலிருக்கும் ஒவ்வொரு வீரரிடமும் சிறப்பான ஆட்டத்தைப் பெறுவதில் கவனம் செலுத்தினால், சென்னை அணி கோப்பையை வெல்லும் எனவும் லாரா தெரிவித்துள்ளார்.