கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். சீசன் 11ன் 39ஆவது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
அதிரடி சிக்ஸர்கள், 200க்கும் மேல் ஸ்டிரைக் ரேட் என்ற டி20 கிரிக்கெட்டின் ஃபார்மேட்டை மாற்றி, பவுலர்களை வைத்தே ஜெயிக்கமுடியும் என்று நிரூபித்துக்காட்டிய ஐதராபாத் அணி, அதன் ரைவலோடு இன்று மோதவிருக்கிறது. இப்போதைய நிலையில் பெங்களூரு அணிக்கு, மற்ற எல்லா அணிகளுமே ரைவல்ரிதான். இந்த சீசன் முழுக்க எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் அந்த அணி, அதை கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறது. வேண்டாமென்று விட்டுவிட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் மற்ற அணியில் கலக்கிக்கொண்டிருக்க, கைவசம் இருக்கும் அணியை வைத்தே மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அந்த அணி.
போட்டி நடக்கவிருக்கும் ஐதராபாத் மைதானம் இந்த ஆண்டு முழுவதும் குறைந்த ரன்னுக்கான பிட்சாகவே இருப்பதால், பெங்களூரு அணியின் பேட்டிங்கிற்கு பெருத்த சோதனை காத்திருக்கிறது எனலாம். அதுமட்டுமின்றி, இந்த மைதானத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய ஐந்து போட்டிகளில் 3 - 1 என ஐதராபாத் அணியே முன்னிலையில் இருக்கிறது.
அதேசமயம், கடந்தகாலங்களில் ஐதராபாத் அணிக்கு எதிராக மற்ற எந்த வீரரையும் விட விராட் கோலி சிறப்பாக ஆடியிருக்கிறார். ஒன்பது போட்டிகளில் 434 ரன்கள் அவர் விளாசியிருக்கிறார். அவரது சராசரி 62, அதிகபட்சமாக 93 ரன்களும் நான்கு அரைசதங்களும் அதில் அடக்கம். சென்னை அணியுடன் தோற்றபின் பேசிய கோலி, ‘இது கடினமான பாதை என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இன்னமும் 4 அல்லது 5 போட்டிகளில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மீதமிருக்கும் போட்டிகளில் நம்பிக்கையோடு விளையாடுவோம்’ என உறுதியளித்தார். தனது அதிரடி பேட்டிங்கின் மூலம், ஐதராபாத்தின் அசத்தல் பவுலிங்கிற்கு சவால் விடுத்து கோலியின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா பெங்களூரு அணி? பொறுத்திருந்து பார்க்கலாம்.