இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்த, அணி மருத்துவரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.
இந்திய, சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், இந்திய ராணுவத்தை சேர்த்த 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த மோதல் இருநாட்டு உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த மோதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு நாடு முழுவதுமுள்ள பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணுவ வீரர்களின் உயிரிழப்பை மேற்கோள்காட்டி மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார் சிஎஸ்கே அணியின் மருத்துவர் மது தோட்டப்பிலில். அவரது அந்த கருத்து கடும் விமர்சனங்களைப் பெற்றதையடுத்து, அதனைத் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அவர் நீக்கினார்.
இதனை தொடர்ந்து அவரது இந்த சர்ச்சை ட்வீட் காரணமாக அவரை அணியின் மருத்துவர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாக்டர் மது தொட்டப்பிலிலின் தனிப்பட்ட ட்வீட் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிந்திருக்கவில்லை. அவர் அணி மருத்துவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகத்தின் கவனத்திற்கு அப்பாற்பட்டு அவர் தெரிவித்த கருத்திற்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் வருத்தம் தெரிவிக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.