Skip to main content

கோலி - தோனி இருவரில் யார் சிறந்த கேப்டன்? விளக்கும் யுவராஜ்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான ஆல்ரவுண்டராக செயல்பட்டவர் யுவராஜ் சிங். தன் ஆக்ரோஷமான ஆட்டத்தால் சிக்ஸர்களைப் பறக்கவிடும் இவர், இந்தத் தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஒருவர் என்று புகழப்பட்டவர். தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் யுவராஜ் சிங்.

 

Yuvi

 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் முன்னாள், இன்னாள் கேப்டன்களைப் பற்றிய தன் பார்வையை விளக்கியுள்ளார். ‘தோனியோடு ஒப்பிடும்போது கோலி முற்றிலும் மாறுபட்டவர். தோனி அமைதியானவர். ஆனால், கோலி மிகவும் ஆக்ரோஷமானவர். தோனி கேப்டனாக பொறுப்பேற்றபோது, அப்போதைய அணியில் அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், கோலி தலைமையிலான அணி பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இதெல்லாவற்றிற்கும் கோலியின் தலைமைப்பண்பே காரணம்’ எனக் கூறினார்.

 

Yuvi

 

மேலும், கிரிக்கெட்டில் உடல்தகுதியின் தேவை குறித்து பேசிய அவர், ‘விளையாட்டு என்று வருகையில் ஒரு வீரருக்கு உடல்தகுதி என்பது மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் விராட் கோலி உடற்தகுதி விஷயங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறார். முந்தைய தலைமுறை வீரர்களோடு ஒப்பிடுகையில், இன்றைய தலைமுறை வீரர்கள் உடல்தகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு விராட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.

Next Story

தீவிர தோனி ரசிகர் மரணம்!

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Die hard Dhoni fan lost his lives in cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி விஜயா தம்பதியின் மகன் கோபிகிருஷ்ணன்(34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ள கோபிகிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்று அங்கு ஆன்லைன் தொழில் செய்து வந்துள்ளார். 

அங்கு சென்று தொழில் செய்தாலும் அவர் விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் துபாயில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், துபாயில் நடைபெறும் மேட்ச்களில் தோனி விளையாடும் அனைத்து மேட்ச்களையும் தவறாமல் பார்த்துவிடுவது வழக்கம். மேலும், இவர் தனது வீட்டை முழுவதும் மஞ்சள் நிறத்தில வண்ணம் பூசி வீட்டின் முன்புறம் தோனி படமும் பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸின் சிங்கப் படத்தையும் சுமார் ஒன்னறை லட்சம் செலவு செய்து வரைந்து வீட்டின் முகப்பில் ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என எழுதி பிரபலமடைந்தார். 

Die hard Dhoni fan lost his lives in cuddalore

இந்த நிலையில்,  அதிக வட்டி தருவதாக கூறிய ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கோபிகிருஷ்ணன் தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவர் வசித்த வந்த கிராமத்தினர் சிலரையும் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியதால் அதை நம்பிய கிராம மக்கள் சிலர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த நிதி நிறுவனம் கிராம மக்களின் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், கோபி கிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர். இதில், கோபிகிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (17-01-24) காணும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற கோபிகிருஷ்ணனனை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று (18-01-24) அதிகாலை 4 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த கோபிகிருஷ்ணனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து பலரது கவனத்தை ஈர்த்த கோபிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தமிழகத்தில் தோனி தொடர்ந்த வழக்கு; ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
nn

கிரிக்கெட்  வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி அங்கும் தோனி மீது, அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில், விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஐபிஎஸ் அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரியின் அந்த பதில் மனு நீதிமன்றங்களையும், நீதித்துறையை நம்பும் மக்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக வாதத்தை வைத்தது தோனி தரப்பு.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.