Skip to main content

ஆஸ்திரேலியாவை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் சந்திக்கும் இந்தியா!

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

India will meet Australia in the final after 20 years!

 

ஆஸ்திரேலிய அணியை 20 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது. 

 

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது.

 

இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் ஆஸி அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவை கட்டாயமாக வீழ்த்த வேண்டும். 4 ஆவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்வது அல்லது தோல்வி அடையும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதில் சந்தேகம் என்கிற நிலை என்றும் நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்ற நிலை ஏற்பட்டது. 

 

புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி 123 புள்ளிகளுடன் 60.29 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் இலங்கை 63 புள்ளிகளுடன் 53.33 வெற்றி சதவீதத்துடன் இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றது. பரபரப்பான இறுதி ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இறுதி வரை களத்தில் போராடிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 194 பந்துகளில் 121 ரன்களை குவித்து நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இப்போட்டியில் இலங்கை தோல்வியுற்றதன் மூலம் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு சென்றது. தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் வாயிலாக இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சுமார் 20 வருடங்கள் கழித்து இந்தியாவும் ஆஸியும் ஐசிசி போட்டியில் பங்கேற்கின்றன. கடைசியில் இந்தியாவும் ஆஸி அணியும் 2003ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா ஆஸ்திரேலியா மோதும் ஐசிசி டெஸ்ட் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.