Skip to main content

இன்னைக்கு என்டர்டெய்ன்மன்ட் நிச்சயம் இருக்கு! - ஐ.பி.எல். போட்டி #24 

Published on 25/04/2018 | Edited on 26/04/2018

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இத்தனை கன்சிஸ்டன்ட் ஆன அணி என்ற ஒன்று அமையவே அமையாது என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸாகத்தான் இருக்க முடியும். அதனால்தான், அந்த அணி இதற்கு முன்னர் ஆடிய எட்டு சீசன்களில் ஆறு இறுதிப்போட்டிகளைச் சந்தித்து, அதில் இரண்டு முறை கோப்பையையும் வென்றது. அது இந்த சீசனிலும் தொடர்வதுதான் அந்த அணியின் பலமே. 

CSK

அதேசமயம், இந்த சீசனில் மிகச்சிறந்த பேட்டிங் லைன்-அப் என்று புகழப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அதற்கான அறிகுறிகளே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறது. கோலி தனியாளாக 92 ரன்கள் அடித்தபோது அனைவரும் வெளியே நின்று கைத்தட்டிக் கொண்டிருந்ததே அதற்கு சாட்சி. மிக முக்கியமான தருணங்களில் விக்கெட்டைக் கொடுத்துவிட்டுச் செல்வதைத் தவிர அந்த அணியின் வீரர்கள் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. இத்தனைக்கும் அந்தப் போட்டியில் டீக்காக்கின் 19 ரன்கள்தான் இரண்டாவது மிகப்பெரிய ஸ்கோர். எந்த நான்கு பவுலர்கள் 49 ரன்களில் சுருட்டினார்களோ, அவர்களை அப்படியே எடுத்துவைத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. 

 

RCB

இந்த இரண்டு அணிகளும் இன்று இரவு 8 மணிக்கு, பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதிய 20 போட்டிகளில் 12 - 9 என்ற கணக்கில் சென்னை அணி முன்னிலை வகிக்கிறது. கடைசி நான்கு போட்டிகளிலும் சென்னையே வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல், பெங்களூரு மைதானத்தில் நடந்த 7 போட்டிகளில் 3 - 3 என்ற கணக்கில் சென்னை பெங்களூருவுக்கு சவாலாக இருக்கிறது. 

என்னதான் சீரான அணியாக இருந்தாலும், தற்போதைய சீசனில் சென்னை அணியின் தடுமாற்றமே அதன் பவுலிங்தான். கடைசி நான்கு ஓவர்களில் அந்த அணியின் பவுலர்கள் அனுபவமின்மையால் திணறுகின்றனர். மேலும், அந்த அணியின் நான்கு வெற்றிகளும் வாழ்வா-சாவா போராட்டத்தில் கிடைத்தவை என்பது யாவரும் அறிந்தது. எனவே, இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெங்களூரு அணி, சென்னை அணியை நிச்சயம் சோதித்துப் பார்க்கும். வெற்றி அங்குல இடைவெளியில் கைமாறலாம். ஆக, இன்றைய போட்டியில் நமக்குத் தேவையான என்டர்டெய்ன்மன்ட் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.