பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு குறிப்பிட்ட கால தடைவிதித்து உத்தரவிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். உலக கிரிக்கெட் அணிகளுக்கு அச்சுறுத்தலை தந்து மிரட்டும் வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தத் தடை உத்தரவு மிகப்பெரிய பின்னடை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ஸ்மித் மற்றும் வார்னர் இடம்பெற வேண்டும் என்ற குரலை பலரும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக், ஸ்மித்தை மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரது இடம் யாராலும் நிரப்ப முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, “ஒருவரின் திறமையை ஒரே இரவில் நம்மால் மறந்துவிட்டு, அவரை இழக்கமுடியாது. அந்த இடத்தில் இன்னொருவரை நிறுத்தவும் முடியாது. ஸ்மித் இளமையான வீரரும் கூட. ஆஸ்திரேலிய மக்கள் நிச்சயம் மன்னிப்பார்கள். அவர் செய்த தவறுக்கான மிக மோசமான தண்டனையை அவர் அனுபவித்திருக்கிறார்” என கூறியுள்ளார்.
மேலும், “அவருக்கு வாய்ப்பளித்தால் மிக உற்சாகமும், வேகமும் கொண்ட வீரராக செயல்படுவார். அவர் கிரிக்கெட்டை நேசிக்கிறார். அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.