இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அலாஸ்டெய்ர் குக், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தியாவுடனான டெஸ்ட் தொடரே தமது கடைசி தொடராக இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸிலேயே 71 ரன்கள் அடித்திருந்த குக், இரண்டாவது இன்னிங்ஸில் கண்டிப்பாக சதமடிக்கும் முனைப்போடு களமிறங்கியிருந்தார். அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் இங்கிலாந்து ரசிகர்களும் அவருக்கு உற்சாகமளித்தபடி இருந்தனர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய குக் சதமடித்தார். 147 ரன்கள் அடித்திருந்த அவர் அனுமா விஹாரியின் பந்தில் தன் விக்கெட்டை இழந்தார்.
இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வெற்றிகரமான இடதுகை ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதாவது இதற்கு முன்னர் இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காராதான் அந்த இடத்தில் இருந்தார். குக் 76 ரன்களைக் கடந்தபோது, சங்கக்காராவின் அதிகபட்ச ரன்னான 12,400-ஐக் கடந்து அவர் இந்த சாதனையைப் படைத்தார்.