இந்தியாவில் சச்சின், கங்குலி, கோலி, தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு எதிராக இருக்கும் சில ரசிகர்களை கூட காணமுடியும். ஆனால், டிராவிட் மற்றும் டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களை வெறுக்கும் கிரிக்கெட் ரசிகர்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்தளவுக்கு தன்னுடைய ஆட்டம், செயல்பாடு, மனிதாபிமானம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் டி வில்லியர்ஸ்.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை போன்று தென் ஆப்பிரிக்காவில் மசான்ஸி சூப்பர் லீக் தொடர் நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று வருகின்றன. கெயில், பிராவோ, ரஷித் கான் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் இந்த லீக்கில் பங்கேற்றனர். இந்த தொடரின் பயிற்சி ஆட்டத்தில் 31 பந்துகளில் 93 ரன்கள் விளாசி தன் கம்பேக்கை காட்டினார் 34 வயதான டி வில்லியர்ஸ். ஸ்ட்ரைக் ரேட் 300.
இந்த நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் மீண்டும் ஒரு அதிரடியை காட்டினார் டி வில்லியர்ஸ். 52 பந்துகளில் 93*. 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள். இந்த தொடரில் 14 சிக்ஸர்கள் உட்பட 282 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 162. ஷ்வேன் ஸ்பார்டன்ஸ் அணிக்கு இவர் ஆடினார். 30 பந்துகளில் 59, 21 பந்துகளில் 39, 18 பந்துகளில் 32 என இந்த தொடரில் சில போட்டிகளில் பட்டையை கிளப்பினார்.
“இந்த தொடரில் பங்குபெற்றதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். கிரிக்கெட்டின் தரம் இந்த மசான்ஸி சூப்பர் லீக்கில் மிகச்சிறந்ததாக இருந்தது. இளம் வீரர்கள் ஆச்சரியம் தரும் வகையில் விளையாடினார்கள். அடுத்த வருடம் மீண்டும் வருவேன். கேப்டவுன் அணி மிகவும் வலுவான அணியாக உள்ளது. மேலும் அவர்களது சொந்த மைதானத்தில் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். லீக்கை வெல்ல கேப்டவுன் அணிக்கு வாய்ப்புகள் அதிகம்.” என்று டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்காவின் லோக்கல் லீக் பற்றி கூறினார்.
ஜெய்ப்பூரில் டிசம்பர் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் 2019 ஐ.பி.எல்.வீரர்கள் ஏலத்தில் 26 தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் உள்ளனர். மசான்ஸி சூப்பர் லீக்கில் கேப்டவுன் பிளிட்ஸ் அணிக்கு விளையாடிய அன்ரிச் நொர்டே மற்றும் ஜேன்மேன் மலன், ஜோசி நட்சத்திரங்கள் அணியின் ரியான் ரிலெல்டன் மற்றும் பைட் பில்ஜோன், ஷ்வேன் ஸ்பார்டன்ஸ் அணியின் லுடோ சிபம்பா உள்ளிட்ட பல புதிய முகங்கள் ஏலத்தில் பங்குபெற உள்ளனர். தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் காலின் இங்க்ராமின் அடிப்படை ஏலத்தொகை ரூ.200 லட்சம் என்பது குறிபிடத்தக்கது.
"ஐபிஎல், உலகின் மிகப்பெரிய டி20 போட்டியாக உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் உள்ள விராட் கோலி மற்றும் மீதமுள்ள என் அணி வீரர்களுடன் மீண்டும் சேர்ந்து விளையாட ஆவலாக உள்ளேன். 2018-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அழிக்க நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்." என்று ஐ.பி.எல். போட்டிகள் குறித்து தனது ஆர்வத்தை நவம்பர் மாதம் கூறியிருந்தார் டி வில்லியர்ஸ்.
தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் இதுவரை ஐ.பி.எல்.-ல் 141 போட்டிகளில் விளையாடியுள்ளார். 3,953 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 39.53. ஸ்ட்ரைக் ரேட் 150. அவரது ஐ.பி.எல். வாழ்க்கையில் மூன்று சதங்களும் 28 அரை சதங்களும் அடங்கும். அடுத்த வருடம் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் பற்றி தொடருக்கு முன்பு “தொடர் மிகவும் சவாலானது. ஆனால் ஆஸ்திரேலியாவில் வெல்லும் திறமை இந்தியாவிடம் உள்ளது. நல்ல வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அணியின் பாஸ்ட் பவுலர்கள் அனைவரும் காயம் பிரச்சனை இல்லாமல் இருந்தால், இந்திய அணிக்கு மிகச்சிறந்த வாய்ப்பு. உலகின் தலைசிறந்த பந்துவீச்சு இணைகளை பெற்றுள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்று. முதல் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான ஒன்று.” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. எனவே இந்த தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த வருடம் மே மாதம்தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். உண்மையை சொல்லப்போனால் மிகவும் களைத்து விட்டதாகவும், இனிமேல் லோக்கல் டி20 போட்டிகளில் மட்டுமே பங்குபெறப் போவதாகவும் கூறினார். “நான் நீண்ட காலமாக யோசித்தேன், டிசன்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் எதிரான அற்புதமான தொடர் வெற்றிக்குப் பிறகு, இது ஓய்வு பெற சரியான நேரம் என்று உணருகிறேன்.” என்று தன் ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். இவர் இந்தியன் பிரிமியர் லீக் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட லோக்கல் டி20 தொடர்களில் விளையாட உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.