ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் குவிக்க, இந்திய அணி 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
துவக்க வீரரான ஆரோன் பின்ச் 124 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 114 ரன்கள் குவித்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அவர் குவித்துள்ள மொத்த ரன்கள் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆரோன் பின்ச் இந்தச் சாதனையைத் தனது 126-ஆவது இன்னிங்ஸில் எட்டியதையடுத்து, குறைவான இன்னிங்ஸில் 5,000 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் என்ற பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இச்சாதனையை 115 இன்னிங்ஸில் எட்டிய டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.