கிரிக்கெட் உலகில் சாம்பியன் அணி என்றால் அது ஆஸ்திரேலியா அணி என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். அவர்களின் திட்டமிடுதல், கையாளும் யுக்திகள், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய துணிச்சல், அதிரடி, பீல்டிங் செய்யும் போது எதிர் அணி வீரரை திட்டுவது, அவர்கள் கவனத்தை சிதைக்கும் வகையில் வசைபாடுவது என்று பல நல்ல மற்றும் கெட்ட வழிமுறைகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி என்றால் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. எப்பொழுதும் இவர் அவரை திட்டினார், அவர் இவரை திட்டினார் என்று சர்ச்சை கிளம்பும். தற்போது கூட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டி'காக் உடன் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மோதல், அதே போல் ரபாடா இரண்டு டெஸ்ட் போட்டியில் தடை பெரும் அளவிற்கு அவரைத் தூண்டி விட்டதுனு இவங்க செஞ்ச வித்தை நிறைய.
ஆனா பாருங்க, இதையெல்லாம் தாண்டி இப்போ சுட சுட ஒரு பிரச்சனை பேசப்பட்டுக்கிட்டு இருக்கு. இந்த விஷயத்துல எப்படி இவ்வளவு மோசமா யோசிச்சுருக்காங்கனு தெரியல. பொதுவா பழைய பந்துல ரிவர்ஸ் ஸ்விங் நல்லா ஆகும். ஒரு பந்தை டெஸ்ட் போட்டியில் குறைந்த பட்சம் 80 ஓவர்கள் வரை பயன்படுத்தி ஆகணும். 80 ஓவர்களுக்குப் பிறகு பௌலிங் கேப்டன் பந்தை மாற்றுவதென்றால் மாத்தலாம். ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து உடனடியாகவோ இல்லை சற்று தாமதமாகவோ மாற்றுவார்கள். பந்து நல்லா ரிவர்ஸ் ஸ்விங் ஆகுது, விக்கெட் விழுகிறது என்றால் அதே பந்தைத் தொடருவாங்க, இல்லை புது பந்தை மாத்திவிடுவாங்க.
பிட்ச்சைப் பொறுத்து ரிவர்ஸ் ஸ்விங்கில் விக்கெட் எடுக்க முடியும். அதற்காகத்தான் பந்தை எச்சில் தடவி பேண்ட்டில் தேய்த்து பந்து வீச்சாளரிடம் தருவாங்க. அப்படித்தான் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் போனகிராபிட் பந்தை தேய்த்துக் கொடுத்தார். இதில் என்ன தப்புனு கேட்டீங்கன்னா, அவர் தேய்த்து கொடுத்தது அவர் பேண்ட்டில் இல்லை பேண்ட்டில் தேய்ப்பது போல உள்ளே மறைத்து வைத்திருந்த சொர சொரப்பான காகிதத்தில் (சாண்ட் பேப்பர்). சுத்தி பல கேமராக்கள் இருக்கும் என்பதை மறந்து இப்படி விதிகளை மீற என்ன துணிச்சல் இருக்க வேண்டும்? ஆஸ்திரேலிய அணி கேப்டன் தான் துணிச்சல் கொடுத்தது, இதை அவர்கள் முக்கிய யுக்திகள் ஆலோசனை தரும் குழுவில் ஒரு யுக்தியாக முடிவு செய்து பொறுப்பை போனகிராப்டிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த யுக்தியை, இருப்பதிலேயே சற்று புது வீரரைத் தேர்ந்தெடுத்து, பாவம் மறுப்பு கூற முடியாதல்லவா, அதனால் அவரை செய்ய சொல்லியிருக்கிறார்கள். அவரும் சரியாக தப்பாக செய்து மாட்டிக்கொண்டார். அவர் மட்டும் இல்லாமல் தொடர்வண்டி போல அனைவரையும் இழுத்து தெருவில் விட்டு விட்டார்.
களத்தில் நடுவர்கள் கேட்டபோது, 'இல்லை' என்று அற்புதமாக நடித்து மறுத்தவர், பின்பு வீடியோ ஆதாரத்துடன் கேட்டதும் ஒப்புக்கொண்டார். முதலில் பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்த ஆஸ்திரேலிய வீரர்கள், பின்பு மறைக்க ஒன்றும் இல்லாததை உணர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
அதான் குற்றத்தை ஒத்துக்கிட்டாங்க, மன்னிப்பும் கேட்டுட்டாங்க, அப்புறம் என்ன பிரச்சனைனு யோசிக்கிறீங்களா? தெரிந்தே ஒரு தப்பை, அதுவும் திட்டம் போட்டு செயல்படுத்தும் போது, இதன் பின்னால் பல கேள்விகள், சரி செய்யப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. கேப்டன் என்பவர் சிறந்த வீரராக இருப்பது மட்டும் அல்லாமல் சிறந்த முன்னோடியாக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும், அந்த நாட்டின் அடையாளமாக இருக்கவேண்டும். இதில் கேப்டன் ஸ்மித் மிகச்சிறந்த வீரராக மட்டுமே காணப்படுகிறார். செய்த தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவார் என்று பார்த்தால், இன்னமும் 'நான் தான் கேப்டன் பதவி வகிப்பதற்கு சிறந்த வீரர்' என்று பேட்டியில் கெத்தாக சொல்கிறார்.
கேப்டனுக்கு இந்தத் துணிச்சலை யார் கொடுத்திருப்பார்கள்? அந்த அணியின் நிர்வாகம் தான் கொடுத்திருக்கும். அதனால் அனைவரது பார்வையும் 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா'வின் மீது உள்ளது. 'மதிப்புமிக்க ஒரு நிர்வாகம் இப்படிப்பட்ட செயல்களை ஊக்குவிக்கிறதா?' என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' மீது ரசிகர்கள் கொண்ட மதிப்பு, நம்பிக்கை அனைத்தும் கேள்விக்குரியாகியிருக்கிறது. இந்தத் தருணத்தில் தான் ஆஸ்திரேலிய பிரதமர், கேப்டனை பதவி விலகச் சொன்னார். துணை கேப்டன் டேவிட் வார்னரும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டிம் பைன் புதிய கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். வரவேற்க வேண்டிய விஷயம்.
ஐசிசி (ICC) இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கும், எதிர்காலத்தில் இதைத் தடுக்க ஆஸ்திரேலியா என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 'ஆஸ்திரேலிய அணி இப்படி செய்வது இதுதான் முதல் முறையா?', 'இன்னும் என்னவெல்லாம் யுக்திகள் வச்சுருக்காங்களோ?' என்று நமக்கும் சில கேள்விகள் தோன்றுகின்றன.